Published : 31 Aug 2022 07:15 AM
Last Updated : 31 Aug 2022 07:15 AM

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆக.31, செப்.1, 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்.1-ம் தேதி மேற்கண்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

2-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களிலும், 3-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நீலகிரி மாட்டம் மசினகுடியில் 10 செ.மீ. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 9 செ.மீ. நீலகிரி மாவட்டம் கிளென்மார்கனில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x