Published : 28 Aug 2022 07:36 AM
Last Updated : 28 Aug 2022 07:36 AM
கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி நிரம்பி, கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவி்ல் கடல் போல காட்சியளிக்கிறது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி 15 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் கொண்டதாகும். ஏரி மூலம் 44 ஆயிரத்து 850 ஏக்கர் பாசனம்பெறுகிறது. சென்னை குடிநீருக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மழை காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரிக்கு நீர் வரும். கடந்த மாதம் கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் கடந்த மாதம் 27-ம் தேதி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டது. நீர்வளத்துறை அதிகாரிகள் பூதங்குடி பகுதியில் உள்ள ஏரியின் வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் வழியாக வெள்ளாற்றில் உபரி நீரை வெளியேற்றினர். தொடர்ந்து ஏரியின் மட்டத்தை அதன் முழு கொள்ளளவான 47.50 அடியில் வைத்து நீர்வளத்துறை அதிகாரி கள் பராமரித்து வந்தனர். சென்னைக்கும் தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
சிதம்பரம் நீர் வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் ஞானசேகர், உதவிப்பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் ஆகியோர் ஏரியின் கரையின் பாதுகாப்பை கருதி தொடர்ந்து கரை பகுதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக ஏரி முழு கொள்ளளவில் உள்ளதால், ஏரியை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. தற்போது ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 502 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு விநாடிக்கு 64 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக உபரி நீர் விநாடிக்கு 438 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக ஏரி முழு கொள்ளளவில் இருப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT