Published : 18 Jun 2014 10:49 AM
Last Updated : 18 Jun 2014 10:49 AM

இலங்கை அரசை கண்டித்து போராட்டம் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கைது

இலங்கையில் முஸ்லிம்கள் மீது புத்த மதத்தினர் மற்றும் அரசு ஆதரவு பெற்ற குழுக்கள் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் வசிக்கும் முஸ்லிம்கள் மீது நடந்த தாக்கு தலைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவித்து இருந்தது. அதன்படி, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கோவை ரஹமத்துல்லா தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி அருகே திரண்டனர். இலங்கை அரசுக்கும் அதிபர் ராஜபக்சேவுக்கும் எதிராக கோஷமிட்டனர். ராஜபக்சே படத்தை செருப்பு, துடைப்பத்தால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர், அவர்கள் அனைவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இலங்கையில் வாழும் முஸ்லிம்கள், புத்த மதத்தினரால் தாக்கப்படுகின்றனர். ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, தங்கள் நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பாதுகாப்பும் தராமல் தாக்குதலை வேடிக்கை பார்க்கிறது. இதனால் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப்படுகின்றன’’ என்றனர்.

இலங்கை தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகம், எழும்பூரில் உள்ள இலங்கை வங்கி, இலங்கை நாட்டவர் அதிகமாக பயன்படுத்தும் எழும்பூர் கென்னத் சாலை ஆகிய இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x