Published : 25 Aug 2022 04:00 AM
Last Updated : 25 Aug 2022 04:00 AM

திமுகவின் கொள்கை, வரலாறுகளை தெரிந்து கொள்ளுங்கள்: மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தேமுதிக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தினகரன். அருகில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. படம்: ஜெ.மனோகரன்

பொள்ளாச்சி

திமுகவில் இணைந்தவர்கள் கட்சியின் கொள்கை, வரலாறுகளை தெரிந்து கொள்ளுங்கள் என பொள்ளாச்சியில் நடந்த மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, தேமுதிக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தினகரன், பாஜக மாநில மகளிரணி நிர்வாகி மைதிலி, மாவட்ட ஊராட்சிகவுன்சிலர் அபிநயா ஆறுக்குட்டி, மக்கள் நீதி மய்ய பிரமுகர் வினோத்உள்ளிட்ட 55 ஆயிரம் பேர் இணைந்தனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பல்வேறுஇயக்கங்களில் இருந்து வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அண்ணா மறைவுக்கு பிறகு திருச்சியில் 1971-ல் முதல் திமுக மாநாடு கருணாநிதி தலைமையில் கூடியது. அண்ணா வழியில் அயராது உழைப்போம். இந்தி திணிப்பை எதிர்ப்போம்.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என 5 முழக்கங்களை தெரிவித்தார். இந்த 5 முழக்கங்களுக்குள் அனைத்தும் அமைந்துள்ளது. பின்னர், 2018-ம் ஆண்டு ஈரோட்டில் நடந்த திமுக மாநாட்டில் தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம், அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம், மதவெறியை மாய்ப்போம்,மனிதநேயம் காப்போம் என நான் 5 முழக்கங்களை தெரிவித்தேன். இந்த 10 முழக்கங்களுக்குள் நம்இயக்கத்தின் கொள்கைகள் அடங்கி விடும்.

திமுக தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கழித்து நாம் முதல் முறையாக ஆட்சிக்கு வந்தோம். ஆனால், இன்று கட்சி தொடங்கிய உடனே சிலர் நான் தான் அடுத்த முதல்வர் என்கின்றனர். சிலர் கட்சியே தொடங்கவில்லை, நான் தான் முதல்வர் என்கின்றனர். நாட்டில் நிறைய கட்சிகள் உள்ளன. நம்மைப் போல் வெற்றி பெற்ற கட்சியும் இல்லை.

தோல்வி பெற்ற கட்சியும் இல்லை, நாம் அடையாத புகழும் இல்லை. படாத அவமானமும் இல்லை. நாம் செய்யாத சாதனைகள் இல்லை. அடையாத வேதனைகள் இல்லை. 70 ஆண்டுகளை கடந்தும் இந்த இயக்கம் செல்வதற்கு நம் கொள்கைகள் தான் காரணம்.

திராவிடம் என்பது மனித உரிமை, திராவிடம் என்பது சமூக நீதி, திராவிடம் என்பது சமதர்மம், திராவிடம் என்பது மொழிப்பற்று, திராவிடம் என்பது இன உரிமை, திராவிடம் என்பது மாநில உரிமை, ஒட்டுமொத்தமாக திராவிடம் என்றால் எல்லாருக்கும் எல்லாம் என்ற கருத்தியல் ஆகும். திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. திமுக மக்களுக்கான இயக்கம்.

தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்கான இயக்கம். அத்தகைய இயக்கத்துக்கு நீங்கள்வந்துள்ளீர்கள். திமுகவின் கொள்கைகள், லட்சியங்கள், வரலாறுகளை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பொள்ளாச்சி தொகுதி எம்.பி கு.சண்முகசுந்தரம், மாவட்டப் பொறுப்பாளர்கள் வரதராஜன், நா.கார்த்திக், மருதமலை சேனாதிபதி, சி.ஆர்.ராமச்சந்திரன், பையா என்ற ஆர்.கிருஷ்ணன், ஜெயராமகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x