Published : 24 Aug 2022 04:25 AM
Last Updated : 24 Aug 2022 04:25 AM
பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆழியாறு - ஒட்டன் சத்திரம் குடிநீர் திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பை வெளியிடுவார் என பிஏபி விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இது குறித்து திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக் குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறியதாவது:
ஆழியாறு அணையின் நீர் தேவைஓராண்டுக்கு 12.70 டி.எம்.சி. (கேரளாவுக்கு 7.25 டிஎம்சி பழைய ஆயக்கட்டு 2.45 டிஎம்சி குடிநீருக்கு 3 டிஎம்சி) ஆகும். இதில் ஆழியாறு அணையிலிருந்து கேரளா எல்லை வரை, ஆழியாற்றின் இருபுறமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மோட்டார்களை வைத்து தண்ணீர் திருடப்படுவதால், கூடுதலாக ஒரு டி.எம்.சி. தண்ணீரை அணையில் இருந்து விடுவிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் நீர்தேவை 13.70 டி.எம்.சி.யாக உள்ளது. இதில், ஆழியாறு, பாலாறுமற்றும் வாகரையாறு ஆகியவற்றின் மூலம் அணைக்கு 10 டி.எம்.சி.தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. 3.70 டி.எம்.சி. பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில், பிஏபி திட்டத்துக்கு தொடர்பே இல்லாத சுமார் 150கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதிக்கு ஆழியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல, அரசாணை வெளியிட்டு, ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் ஆழியாறு அணைக்கு கீழே உள்ளஅனைத்து கூட்டுக் குடிநீர் திட்டங்களும், 4.25 லட்சம் ஏக்கர் பிஏபி விவசாயமும் அழிந்து போகும்.
ஒட்டன்சத்திரம் பகுதிக்கு ஏற்கெனவே காவிரி ஆற்றில் இருந்து இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டங்களும், பரப்பலாறு, பாலாறு - பொருந்தலாறு ஆகிய அணைகளில் இருந்து இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. தண்ணீர் பற்றாக்குறைக்கு ஒட்டன்சத்திரம் தொகுதியின் எல்லையிலுள்ள அமராவதி ஆறு அல்லது ஏற்கெனவே உள்ள குடிநீர் திட்டங்களை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்ட அரசாணை, தமிழ்நாடு - கேரளா பிஏபி ஒப்பந்தத்தை மீறுகிற செயல் என, தமிழக அரசிடம் கேரளா அரசு ஆட்சேபனை செய்துள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒப்பந்தத்தை புதுப்பிக்க கேரளா அரசு ஒத்துழைக்காது. எனவே, ஆழியாறு – ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்ட அரசாணையை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT