Published : 24 Aug 2022 04:30 AM
Last Updated : 24 Aug 2022 04:30 AM

சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையில் ஆய்வு செய்து விபத்து அபாயங்களை தடுக்க மக்கள் வேண்டுகோள்

சேலம்

சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையில் நிலவி வரும் விபத்து அபாயங்களை போக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலை மொத்தம் 136.35 கிமீ. நீளம் கொண்டது. இந்த சாலையானது சேலம் மட்டுமல்லாது, கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், கொச்சி உள்ளிட்ட நகரங்கள், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களையும் சென்னையுடன் இணைக்கும் நெடுஞ்சாலையாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை இச்சாலையில் ஆத்தூரில் நடந்த இரு விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை, 4 வழிச்சாலை என்று குறிப்பிட்டாலும், சேலம் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள புறவழிச்சாலைகள் யாவும் இரு வழிச்சாலையாகவே இருக்கின்றன.

குறுகிய சாலை

ஆத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் புறவழிச்சாலையில் இருக்கும் மேம்பாலங்கள் சாலையை விட மிகவும் குறுகியவை. இதனால், சற்று கவனக்குறைவாக இருந்தாலும் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிவிடும் அபாயம் உள்ளது. இதனால் பல விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

மற்றொரு அபாயமாக, 4 வழிச்சாலையில் தனித்தனி பாதையில் எதிரெதிர் வாகனங்கள் வந்து கொண்டிருக்கும்போது, அவை புறவழிச்சாலைக்குள் நுழையும்போது ஒரே சாலையில் வெறும் வெள்ளைக்கோட்டினை மையப்படுத்தி எதிரெதிரே பயணிக்கத் தொடங்கும் நிலை உள்ளது. இந்த திடீர் மாற்றம் வாகன ஓட்டிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

எச்சரிக்கை தடுப்பு

எனவே, வாகனங்களின் வேகத்தைக் குறைக்க அதிக எச்சரிக்கை தடுப்புகள், உயர் மின்கோபுர விளக்குகளை அமைக்க வேண்டும். புறவழிச்சாலைகளில், சாலைகளின் மையம், ஓரங்களை இரவிலும் அடையாளம் காணும் வகையில் பிரதிபலிப்பான்கள், வெள்ளைக் கோடுகளை ஏற்படுத்த வேண்டும். இரவில் புறவழிச்சாலைகளை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்த வேண்டும். ஏற்கெனவே, நடைமுறையில் இருந்த இந்தத் திட்டம் தற்போது இல்லை. இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்பரசன் கூறியதாவது:

சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் கிராமங்களை ஒட்டிய பகுதியில் சாலையின் குறுக்கே மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, சாலையின் குறுக்கே, இரவிலும் ஒளிரும் வேகத்தடுப்புகளை வைக்க வேண்டும். விஐபி.-க்கள் வருகையின்போது அகற்றப்படும் வேகத்தடுப்புகளை, மீண்டும் அதே இடத்தில் துரிதமாக வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

விபத்துகளை தடுக்க சாலையோர கிராமங்களின் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கண்காணிப்பு பொறுப்பு வழங்க வேண்டும். சில இடங்களில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள், 4 வழிச்சாலையின் குறுக்கே கடந்து தான் ஊருக்குள் செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற இடங்களில், மேம்பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாவட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் நிலவும் விபத்து அபாயத்தை தடுக்க, ஆய்வு மேற்கொண்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x