Published : 24 Aug 2022 04:40 AM
Last Updated : 24 Aug 2022 04:40 AM
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் போலீஸாரின் கைதுக்குப் பயந்து பாஜகவினர் பலர் தலைமறைவாகி உள்ளனர். விமான நிலையம் செல்லாதோரையும் போலீஸார் விசாரிப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தபோது மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த லெட்சுமணன் வீர மரணமடைந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விமான நிலையத்தை விட்டு புறப்பட்ட அமைச்சர் காரை பாஜகவினர் தடுத்து நிறுத்தி காலணி வீசினர்.
இது தொடர்பாக அவனியாபுரம் போலீஸார் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் முதலில் 10 பேரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப் பட்டிருந்தன. அந்த 10 பேரையும் போலீஸார் கைது செய்துவிட்டனர்.
முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் சரவணனின் தூண்டுதல் பேரில் அமைச்சர் காரை தடுத்து நிறுத்தி காலணி வீசியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சரவணன் பாஜகவிலிருந்து விலகியதால் அவர் உடனடியாக கைதாகவில்லை.
இதற்கிடையே சரவணனை கைது செய்யக்கோரி மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள், அரசு தொடர்புப் பிரிவு மாவட்டத் தலைவர் கோசா பெருமாள், செயலாளர் கே.என்.ஆதிகணேசன் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
இந்நிலையில் காலணி வீச்சு சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து பாஜகவினரை கைது செய்வதில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். விமான நிலையம் செல்லாத பாஜக நிர்வாகிகளையும் போலீஸார் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் கைதுக்குப் பயந்து மதுரை மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
மாநில அரசு தொடர்புப் பிரிவுச் செயலாளர் ராஜரத்தினத்தை போலீஸார் நேற்று முன்தினம் இரவில் அவனியாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர்.
இது குறித்து அவர் கூறியதாவது: முதல் தகவல் அறிக்கையில் முதலில் எங்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. டாக்டர் சரவணனை கைது செய்யக்கோரி மனு அளித்ததால் விமான நிலையம் செல்லாத பாஜக நிர்வாகிகளையும் வழக்கில் சேர்த்துள்ளனர். நான் விமானம் நிலையம் செல்லவில்லை. இருப்பினும் என்னை போலீஸார் அழைத்து விசாரித்தனர்.
விமான நிலையத்துக்கு வந்தது யார்? வராதவர்கள் யார்? பாஜக நிர்வாகிகள் யார்? என்பதைக்கூட அறிய முடியாத நிலையில் உளவுத் துறையினர் உள்ளனர். உளவுத் துறையினரின் இந்தச் செயல்பாடு சரியானது அல்ல. விசாரணை என்ற பெயரில் பாஜகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள், திறமையானவர்களை ஒடுக்கும் பணியையும் பாஜகவினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் போலீஸார் செயல்படுகின்றனர்.
இவ்வாறு ராஜரத்தினம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT