Published : 24 Aug 2022 04:45 AM
Last Updated : 24 Aug 2022 04:45 AM
பட்டுக்கோட்டை வழியாக செகந்திராபாத்- ராமேசுவரம் வாராந்திர விரைவு ரயில் இன்று முதல் (ஆ.24) இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் சென்னை செல்ல 16 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளதால் பட்டுக்கோட்டை பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த ரயில் நாளை (ஆக.25) பட்டுகோட்டை வரும்போது சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர்- காரைக்குடி இடையே இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதை, 2006-ம் ஆண்டு முதல் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து, திருவாரூர் -காரைக்குடி அகல ரயில் பாதையில் சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், செகந்திராபாத்- ராமேசுவரம் இடையேயான வாராந்திர விரைவு ரயில் இன்று (ஆக.24) முதல் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, செகந்திராபாத்திலிருந்து புதன்கிழமைகளில் புறப்படும் இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வழியாக விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேசுவரம் செல்கிறது. அதேபோல, வெள்ளிக்கிழமை தோறும் ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் சனிக்கிழமை செகந்திராபாத் சென்றடையும்.
இதன்மூலம் இந்த வழித்தடத்தில் சென்னைக்கு செல்ல நேரடி ரயில் வசதி கிடைத்துள்ளதால் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து செகந்திராபாத்திலிருந்து புறப்படும் புதிய வாராந்திர விரைவு ரயில் நாளை (ஆக.25) மாலை 4.50 மணிக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு வரும். அப்போது ரயிலுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறும்போது, “2006-ம் ஆண்டு காரைக்குடி- சென்னை இடையே கம்பன் விரைவு ரயில் மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டது. அதன்பிறகு அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியதால் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் சென்னைக்கு பட்டுக்கோட்டை வழியாக நேரடி ரயில் இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். இதையடுத்து தற்போது புதிதாக செகந்திராபாத்- ராமேசுவரம் இடையேயான விரைவு ரயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.
இதன்மூலம் சென்னை - பட்டுக்கோட்டை இடையே 16 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பெரும் மகிழ்வோடு உள்ளோம். இந்த ரயிலுக்கு பட்டுக்கோட்டையில் சிறப்பாக வரவேற்பளிக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT