Published : 22 Aug 2022 04:04 PM
Last Updated : 22 Aug 2022 04:04 PM
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வரும் செப்டம்பருக்குள் 80 சதவீதம் நிறைவு பெறும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கொசஸ்தலை பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை 2023-ம் ஆண்டில்தான் முடிக்க வேண்டும். ஆனால், அதில்கூட 60 முதல் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சென்னை மாநகரின் உள்பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளில் ஒரு சில இடங்களில், 40 சதவீதம், சில இடங்களில் 50 சதவீதம் ஒரு சில இடங்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் என சம்பளங்களால் பணி மாறுபட்டு, தாமதமாக இருக்கிறது.
ஏற்கெனவே ஒப்பந்ததாரர்கள் ஆள் பற்றாக்குறை இருப்பதாக கூறிய இடங்களில், ஆட்களை கூடுதலாக பணியமர்த்தி பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளோம். எவ்வளவு சீக்கிரமாக அவ்வளவு சீக்கிரம் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம். செம்படம்பருக்கு எங்களுடைய கணிப்பு ஒரு 80 சதவீத பணிகள் நிறைவடையும்.
கடந்த முறை புளியந்தோப்பு பகுதியில், மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த முறை அங்கு தண்ணீர் தேங்காது. அந்தப் பகுதியில் எல்லாம் கிட்டத்தட்ட 90 சதவீத பணிகளை முடித்துவிட்டனர். அதுபோல பணிகள் முடிந்த இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை. கடந்தாண்டு போல இருக்காது. வழக்கமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கும், அதை மோட்டார் மூலம் ஓரிரு சரி செய்துவிடுவோம். அடுத்த ஆண்டு சென்னை முழுவதும் சரியாகிவிடும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT