Published : 21 Aug 2022 04:40 AM
Last Updated : 21 Aug 2022 04:40 AM

கேரளாவை பின்பற்றி ஆட்டோ முன்பதிவுக்கான ‘அரசு செயலி’ தமிழகத்திலும் அறிமுகமாகுமா?

சென்னை

ஆட்டோ முன்பதிவுக்கான அரசு செயலியை கேரள அரசு தொடங்கியுள்ளது. இதைப் பின்பற்றி தமிழகத்திலும் செயலியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆட்டோ என்னும் வாகனம் பொது போக்குவரத்தில் பெரும் பங்களிப்பைச் செய்து வந்தாலும், பயணிகளுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கட்டணம் தொடர்பான மோதல் தொடர் கதையாகவே உள்ளது.

இந்நிலையில் தான் கேரளாவில் டாக்சி, ஆட்டோவுக்கான முன்பதிவு செயலியை ஆக.17-ம் தேதி அரசே தொடங்கியுள்ளது. இந்தச் செயலியில் பேனிக் பட்டன் உட்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக செயலியில் வாகனங்களை இணைக்க காவல் துறையின் சான்று கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் எப்போது இதுபோன்ற செயலி அரசு தரப்பில் உருவாக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது, "மக்கள் பயன்பாட்டில் நவீன தொழில்நுட்பத்தைத் தவிர்க்க முடியாது. அது மக்களுக்கு நம்பிக்கையையும் தருகிறது. ஆட்டோ முன்பதிவுக்கான செயலியை அரசு தொடங்க வேண்டும் என நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

வழக்கமாக பண்டிகை நாள், அலுவலக நேரம், புறநகருக்குச் செல்லுதல் ஆகிய நேரங்களில் கூடுதல் கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் வசூலிப்பர். அதே காரணத்தைக் கூறி தற்போது கார்ப்பரேட் ஆட்டோ முன்பதிவு செயலிகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த கட்டணம் ஓட்டுநர்களையும் சென்றடைவதில்லை.

சவாரியில் கிடைக்கும் ரூ.100-ல் 40 சதவீதம் செயலி எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1.50 கோடி வருவாய் கிடைக்கிறது. இதுபோல் இல்லாமல் அரசு ஒரு செயலியை உருவாக்கி சரியான கட்டணத்தை வசூலிக்க வழிவகுத்தால், மக்களும் அதிகளவில் அந்தச் செயலியைப் பயன்படுத்துவார்கள். ஓட்டுநர்களுக்கும் தொடர்ந்து வருவாய் கிடைக்கும். அரசு நினைத்தால் இதனை 15 நாட்களில் செயல்படுத்த முடியும்" என்றார்.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் மாநிலத் தலைவர் செ.பால்பர்ணபாஸ் கூறும்போது, “ஏற்கெனவே போக்குவரத்துத் துறையுடன் நடந்த கூட்டத்தில் செயலியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். இடைக்காலமாக கட்டணத்தை நிர்ணயித்து, தமிழக அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும். அனைத்து விஷயங்களிலும் அரசு நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறது.

இதனால் நுகர்வோர்தான் பாதிப்புக்குள்ளாகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் செயலிகளால் வரியை மட்டுமே அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் செயலியை அரசு நடத்தினால் வருவாயே அதிகமாக கிடைக்கும். இதன் மூலம் ஆட்டோ ஊழியர்களுக்கும் நிலையான வருமானம், பிஎப் போன்றவற்றை கூட வழங்க முடியும். கேரளாவைப் போன்று தமிழகத்துக்கான ஆட்டோ செயலியைத் தொடங்க வேண்டும். இதில் முன்பதிவு செய்யும் போது அவசர நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர்களால் மறுக்கவும் முடியாது" என்றார்.

தமிழகத்தில் ஆட்டோ முன்பதிவுக்கான செயலி தொடங்குவது குறித்து அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என ‘இந்து தமிழ் திசை’ சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

கேரள அரசு, ‘கேரளா சவாரி’ என்றசெயலி தொடங்கியிருப்பதாக கேள்விப்பட்டு, அதிகாரிகளுடன் அதுகுறித்து விவாதித்துள்ளோம். போக்குவரத்துத் துறை மட்டும் இதைக் கையாள முடியாது. போக்குவரத்துக் கழகம் போன்று அரசுக்கு சொந்தமானவற்றின் மூலம் சேவை செய்வது என்பது வேறு.

ஆனால் ஆட்டோ என்பது மிகப்பெரிய சமூகம். இதில் உள்ள ஓட்டுநர்களை ஒருங்கிணைக்கும்போது எழும் பிரச்சினைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசித்துள்ளோம். அந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து தொழிலாளர் நலத்துறையுடன் கலந்து பேசி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும்.

இதில் நிதி என்பது பெரிய பிரச்சினை இல்லை. ஓட்டுநர்கள், பயணிகள் என இருவரது பாதுகாப்பு குறித்தும் ஒருங்கிணைப்புப் பணிகளைக் கையாள்வது குறித்தும் ஆலோசனையில் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 3.20 லட்சம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. சென்னையில் மட்டும் 1.20 லட்சம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. இந்தத் தொழிலை நம்பி மாநிலம் முழுவதும் 4.50 லட்சம் ஓட்டுநர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x