Published : 21 Aug 2022 04:35 AM
Last Updated : 21 Aug 2022 04:35 AM

நோயாளிக்கு நலமுடன் இருப்பதாக சான்று: மருத்துவரின் பதிவை நிறுத்தும் உத்தரவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை

சிகிச்சையில் இருந்த நோயாளி நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய மருத்துவரின் பதிவை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2015 செப்.27-ல் அனுமதிக்கப்பட்ட பிச்சுமணி என்பவர் சிகிச்சை பலனின்றி அக்.11-ல் இறந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக பிச்சுமணியின் மகள் சுபிதா மருத்துவ ஆணையத்தில் அளித்தபுகாரில், தனது தந்தை சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் ஆரோக்கியமாக நலமுடன் இருப்பதாக தனது சகோதரரின் மாமனாரான கோவையைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.ராதாகிருஷ்ணன் போலியாக சான்றிதழ் கொடுத்துள்ளார்.

அதன்மூலம் ரூ. 50 கோடிமதிப்புள்ள சொத்துகள் தனது சகோதரரின் பெயருக்கு பதிவு செய்யப்பட்டு முறைகேடு நடந்துள்ளது, என தெரிவித்திருந்தார். அதன்படி விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், மருத்துவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பதிவை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தனதுமருமகன் பெயருக்கு சொத்துகளை பதிவு செய்யும் உள்நோக்கத்துடன் போலியாக சான்றிதழ் வழங்கிய மருத்துவர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. அதற்காக விதிக்கப்பட்ட தண்டனையை அதிகமாக கருதவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து அமெரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறப்பு மருத்துவம் பயின்ற மருத்துவர் ராதாகிருஷ்ணனின் நன்மதிப்பை, இந்த சொத்துகளின் மதிப்பு கெடுத்து விட்டதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x