Published : 15 Aug 2022 06:25 AM
Last Updated : 15 Aug 2022 06:25 AM

மூவண்ணக் கொடியைப் போற்றுவோம்; மூட அரசியல் தனத்தை அடக்குவோம்: மதுரை தாக்குதல் சம்பவத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை

மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் அமைச்சரின் வாகனத்தின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம்: இந்தியாவின் 76-வது விடுதலை நாள் விழா, உணர்வில் கலந்த கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இறையாண்மை மிக்க மத்திய, மாநில அரசுகள் என்ற அரசியல் சட்டத்தின் வழியே கூட்டாட்சி கருத்தியலை முன்னெடுக்கும் நிலையில், நாட்டின் பன்முகத்தன்மை, ஒருமைப்பாட்டை மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் ‘தேசபக்திக்கு’ ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள் என்பதுபோல் நினைத்து, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் மறைவுக்கு, முதல்வர் என்ற முறையில் இரங்கல் தெரிவித்ததுடன், அரசு மரியாதையை செலுத்தும்படி நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை பணித்தேன். அமைச்சர் ராணுவ வீரர் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், லட்சுமணன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மலர்வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.

அந்த இடத்தில், மலிவான அரசியல் விளம்பரம் தேட, தமிழக பாஜக தலைவர், அவரது கட்சி நிர்வாகிகள் குவிந்திருந்தனர். இதுகுறித்து அமைச்சர், அதிகாரிகள் கேள்வி எழுப்பியதற்காக அடாவடியான செயல்களில் ஈடுபட்டு, தங்களின் தேசபக்தி என்பது எத்தனை போலியானது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தேசியக் கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது காலணி வீசி, விடுதலை நாளின் பவளவிழா மகத்துவத்தை மலினப்படுத்தியுள்ளனர். ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தாமல், விடுதலையின் 75-வது ஆண்டை அரசியலுக்காகப் பயன்படுத்தும் இவர்கள், தேசியக் கொடியை அவமதித்துள்ளனர்.

இவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே, அமைச்சரை சந்தித்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதுடன், இனி இவர்கள் தொடர்பே வேண்டாம் என தலைமுழுகியுள்ளார். அமைச்சரும் கண்ணியத்துடன், தனக்கு எதிரான சம்பவத்தை அம்பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கையை ஏற்று திமுகவினர் அமைதி காத்து வருகின்றனர்.

அமைச்சர் கார் மீது காலணி வீசியும், விடுதலையின் 75-ம் ஆண்டு பவளவிழாவில் தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழகத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இது தமிழகம், இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது.

திமுக ஒரு ஜனநாயக இயக்கம். அறவழியில்தான் அது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது. ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், அந்தப் பொறுப்பினை உணர்ந்து, தமிழகத்தின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும், திமுகவும் செயல்பட்டு வருகிறது.

இதை சாதகமாக நினைத்துக்கொண்டு, சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல்வீணர்கள் செயல்பட்டால், அவர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவிட மாட்டோம் என உறுதியளிக்கிறேன்.

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல் தனத்தை சட்டப்படி அடக்குவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x