Published : 14 Aug 2022 04:45 AM
Last Updated : 14 Aug 2022 04:45 AM

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தீர்வில்லை: ஓய்வூதியம் கேட்டு 9 ஆண்டுகளாக போராடும் தியாகியின் மகள்

கோவில்பட்டியைச் சேர்ந்த தியாகி மாடசாமியின் மகள் இந்திரா.

கோவில்பட்டி

“வாழ்வாதாரத்துக்கு வழி தேடித் தாருங்கள்” என, தியாகியின் ஆதரவற்ற மகள் வலியுறுத்தி இருக்கிறார்.

கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தியாகி மாடசாமி. சிங்கப்பூரில் பணியில் இருந்த இவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கிய ஐ.என்.ஏ. படையின் வளர்ச்சிக்காக 7,000 டாலர் கொடுத்தார். ஐ.என்.ஏ.வில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தார். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இவருக்கு 1972-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி மத்திய அரசின் ‘தாமிரப் பட்டயம்’ வழங்கிகவுரவித்துள்ளார். 2002-ல் மாடசாமி உயிரிழந்தார்.

அவர் பெற்று வந்த தியாகிகள் ஓய்வூதியம் அவரது மனைவி வள்ளியம்மாளுக்கு வழங்கப்பட்டு வந்தது. திருமணமாகாத இவரதுமகள் இந்திரா தனது தாயின் பாதுகாப்பில் இருந்து வந்தார். வள்ளியம்மாள் காலமானதை தொடர்ந்து தற்போது தனியாக வசிக்கிறார். தனது தந்தைக்கு வழங்கப்பட்ட தியாகி ஓய்வூதியத்தை தனக்கு வழங்க வேண்டும் என, கடந்த 9 ஆண்டுகளாக இந்திரா போராடி வருகிறார்.

கடந்த ஜனவரியில் மாவட்டஆட்சியரிடம் மனு அளித்தார். அவருக்கு ஆறுதல் கூறிய ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆனாலும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. தன்னை கருணை கொலை செய்யவலியுறுத்தி குடியரசு தலைவர், ஆளுநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பதிவு தபால் அனுப்பினார். கடந்த வாரம் கோட்டாட்சியர் மகாலட்சுமி நேரில் வந்து இந்திராவுக்கு ஆறுதல் கூறினார்.

இந்திரா கூறும்போது, “எனதுதந்தையும், தாயும் இறந்த பின்னர் ஆதரவற்று நிற்கிறேன். எனது தந்தைக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை எனக்கு வழங்க கோரி போராடி வருகிறேன். அதிகாரிகள் கேட்ட 14 வகைசான்றிதழ்களையும் சமர்பித்துள்ளோம். இதுதொடர்பான வழக்கில் எனக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை” என்றார்.

தியாகிகள் வாரிசுகள் நலச்சங்க தாலுகா செயலாளர் கே.எஸ்.செல்வம் கூறும்போது, “ஓட்டலில் பாத்திரங்கள் கழுவி தனது வாழ்க்கையை இந்திரா நகர்த்தி வருகிறார். உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். தியாகிகளின் காலத்துக்கு பின்னர், அவருக்கு திருமணமாகாத மகள் இருந்தால் அவருக்கு தியாகி ஓய்வூதியம் வழங்கலாம் என்று விதி உள்ளது.

9 ஆண்டுகாலமாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறார். நம்பிக்கை இழந்த அவர் தன்னை கருணை கொலை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இந்தாண்டு வீட்டில் இருந்தே சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x