Published : 10 Aug 2022 07:00 PM
Last Updated : 10 Aug 2022 07:00 PM
திருச்சி: ரயில்கள் வரும்போது ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக, அவற்றில் சென்சார் கருவிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக திருச்சி ரயில்வே கோட்டத்தில், கடலூர்-மயிலாடுதுறை இடையே 10 ரயில்வே கேட்களில் சோதனை அடிப்படையில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 515 இடங்களில் ரயில்வே கேட்கள் உள்ளன. இவற்றில் 127 கேட்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்கள் கட்டுப்பாட்டிலும், மீதம் உள்ள 388 கேட்கள் இன்ஜினீயரிங் பிரிவுகட்டுப்பாட்டிலும் உள்ளன.
இதில், ரயில் நிலையங்கள் அருகில் உள்ள கேட்கள், ஸ்டேஷன் மாஸ்டர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இன்ஜினீரியங் கட்டுப்பாட்டில் உள்ள 388 கேட்களில் 197 கேட்கள், ரயில் நிலைய சிக்னல்மூலம் இணைக்கப்பட்டு, ரயில் வரும்போதுதானாக மூடிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்ற 191 ரயில்வே கேட்களில் ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், சங்கேத வார்த்தைகளால் கேட் மூடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில், சில நேரங்களில் கேட் மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. ரயில்வே கேட்டில்உள்ள ஊழியரின் அலட்சியத்தால் ஒருவேளை கேட் மூடப்படாமல் இருந்தால், விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளது.
இதையடுத்து, இவற்றை கண்காணிப்பதற்காக இன்ஜினியரிங் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே கேட்களில் சென்சார் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக திருச்சி ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாககடலூர்-மயிலாடுதுறை இடையே 10 ரயில்வே கேட்களில் சென்சார் கருவி சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள், திருச்சிகோட்ட இயக்கப்பிரிவு அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் எம்.ஹரிகுமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: "இந்த திட்டத்தின்படி, ரயில்வே கேட்களில் பொருத்தப்படும் சென்சார், அருகில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள கையடக்க கணினியுடன்(டேப்) இணைக்கப்படும். ரயில் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன் கேட் மூடியிருந்தால், ரயில் நிலையத்தில் உள்ள கையடக்க கணினியில் 180 டிகிரியில் கோடு காட்டும். ஒருவேளை ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்தால் கையடக்க கணினியில் 80 டிகிரியில் கோடு காட்டும்.
இதைப் பார்த்து ரயில் நிலையத்திலிருந்து, சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்கீப்பரை தொடர்பு கொண்டு, ரயில்வே கேட்டை மூடுவது குறித்து அறிவுறுத்தப்படும்.
ரயில்வே கேட்டில் பொருத்தப்படும் இந்த சென்சாரில் கேட் திறக்கப்படும், மூடப்படும் நேரம் ஆகிய விவரங்கள் ஒரு மாதத்துக்கு சேமிக்கப்பட்டிருக்கும். எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும்போது, அதில் பதிவாகியுள்ள கேட் மூடப்படும் நேரம், திறக்கும் நேரம் குறித்து எப்போது வேண்டுமானாலும் ஆதாரத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.
சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ள இக்கருவிகளின் செயல்பாடுகள் குறித்து உயரதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, மீதமுள்ள ரயில்வே கேட்களில் இந்தக் கருவிகள் பொருத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT