Published : 09 Aug 2022 04:00 AM
Last Updated : 09 Aug 2022 04:00 AM
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. கேரள எல்லையை ஒட்டிய கூடலூர், பந்தலூர் பகுதிகளில் விடிய, விடியசூறாவளி காற்றுடன் பெய்த மழையால், முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தோடியது. பல இடங்களில் மரங்கள்முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலுள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
கூடலூர் அருகே புறமணவயல்ஆதிவாசி கிராமத்தில் 60-க்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மழையால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது.தகவல் அறிந்து வருவாய் துறையினர் சென்று, 66 குடும்பத்தினரையும் மீட்டு முகாமில் தங்கவைத்தனர்.
இதேபோல, பந்தலூர் அருகே ஆதிவாசி கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தவித்தனர். அங்கிருந்த 15 குடும்பத்தினர் மீட்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பழங்குடியினர் கிராம குடியிருப்பையும் வெள்ளம் சூழ்ந்தது.
முதுமலை அருகே தெப்பக்காடு வனப்பகுதியிலுள்ள மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மாயாற்றின் குறுக்கே கூடலூர் -மசினகுடி பகுதிகளை இணைக்கும் தரைப்பாலம், வெள்ளப்பெருக்கால் முழுவதும் நீரில் மூழ்கியது. அந்த வழியாக, தண்ணீரில் தத்தளித்தபடி வாகனங்கள் சென்றன.
இதைத்தொடர்ந்து, கூடலூர்-மசினகுடி தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும்துண்டிக்கப்பட்டது. இதேபோல உதகை, மஞ்சூர், கோத்தகிரி,குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் கடும் குளிர் நிலவுகிறது. தொடர் மழை காரணமாக உதகை, குந்தா,கூடலூர்,பந்தலூர் ஆகிய தாலுகாக்களிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் 4-வது நாளாக நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.
வனத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் கூறும்போது, "கூடலூர் பகுதியில் நேற்று கன மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் பேரிடர் மீட்புப் படை மற்றும் அனைத்து துறைகளும் ஈடுபட்டு வருகின்றன" என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 194 மில்லிமீட்டர் மழை பதிவானது. அப்பர் பவானி - 189, தேவாலா - 188, கூடலூர் - 185, பந்தலூர் - 185, சேரங்கோடு - 77, நடுவட்டம் - 60, கிளன்மார்கன் - 60, பாடந்தொரை - 52, பாலகொலா - 50, எமரால்டு - 38, உதகை - 35, செருமுள்ளி - 28, ஓவேலி - 26, மசினகுடி - 14, கோடநாடு- 5, குந்தா - 4, கோத்தகிரியில் 2 மி.மீ. மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT