Published : 09 Aug 2022 07:46 AM
Last Updated : 09 Aug 2022 07:46 AM
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம், அரசு புறம்போக்கு நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 35 ஆண்டுகளாக தங்களதுஅனுபவத்தில் உள்ள 31.37 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கே ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கான இழப்பீட்டுத் தொகையை செலுத்தவோ அல்லது அதற்கு பதிலாக வேறு நிலம் வழங்கவோ தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. மேலும், சாஸ்த்ராபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிலத்தை 4 வாரங்களுக்குள் காலி செய்து கொடுக்க வேண்டும் எனவும் தஞ்சை வட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி, ‘‘அரசு புறம்போக்கு நிலத்துக்கு பதிலாக வேறு நிலத்தை மாற்று நிலமாக எடுத்துக் கொள்ள தமிழக அரசுகடந்த மே மாதம் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாற்று நிலம் வழங்க தயாராக இருக்கிறோம். அதற்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமா என்பதை அரசு விளக்கினால் இந்த வழக்கை நடத்த ஏதுவாக இருக்கும்’’ என்றனர்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘அரசு புறம்போக்கு நிலத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவிடாமல் பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 35 ஆண்டுகளாக தடுத்துவருகிறது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சிறுசிறு ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றச் சென்றால், முதலில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலத்தை மீட்டுவிட்டு எங்களிடம் வாருங்கள் என பொதுமக்கள் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. நீர்நிலைப் புறம்போக்கு பகுதிகளை அந்த பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதால் மாற்று இடத்தை பெற்றுக்கொள்ளும் அரசாணை சாஸ்த்ராவுக்கு பொருந்தாது’’ என ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் பகுதி நீர்நிலைதான் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில்..
மேலும், அரசின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் அங்குதங்கியுள்ள மற்றும் படிக்கும் மாணவர்களின் கல்விக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், இந்த வழக்கு முடியும்வரை சாஸ்த்ராபல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நிலம், ஆவணமாக உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT