Published : 07 Aug 2022 05:04 AM
Last Updated : 07 Aug 2022 05:04 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை கவரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
கொடைக்கானலுக்கு ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இயற்கையின் கொடையாக விளங்கும் கொடைக்கானல் மலைப்பகுதி வண்ணத்துப் பூச்சிகளின் (பட்டாம்பூச்சி) வாழ்விடமாகவும் அமைந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மயிலாடும்பாறை, மன்னவனுார், தாண்டிக்குடி, அடுக்கம், பேரிஜம், பேத்துப்பாறை பகுதியில் ஏராளமான பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன.
சவுத்தன் பர்ட்விங்க், ரெட்ஹெலன், புளூ மார்மோன், பாரிஸ்பீகாக், நீலகிரி டைகர், பெயின்டட் லேடி, பிளாக் பிரின்ஸ், பழநி புஷ்பிரவுன், பழநி போர்ரிங், தமிழ்மறவன் உட்பட 180 வகையான பட்டாம்பூச்சிகள் வனத்துறை மற்றும் பட்டாம்பூச்சி ஆர்வலர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
அதில் தமிழ் மறவன் (தமிழ் இயோமேன்) எனும் பட்டாம்பூச்சியை தமிழக அரசு மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்துள்ளது. இந்த வகை பட்டாம்பூச்சி மிகவும் அரிதானது. இதை வத்தலகுண்டு-கொடைக்கானல் செல்லும் காட்ரோட்டிலிருந்தும், பழநி-கொடைக்கானல் செல்லும் மலையடிவாரப் பகுதிகளிலும் பார்க்கலாம்.
தமிழகத்தில் பிற இடங்களில் பார்க்க முடியாத பட்டாம்பூச்சிகளை கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அதிகமாக பார்க்கலாம். மாறிவரும் காலநிலைகள், சுற்றுச்சூழல் மாற்றம், நகரமயமாக்கல், காடுகளை அழிப்பதால் பட்டாம்பூச்சிகள் அழிந்து வருகின்றன. பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கவும், பட்டாம்பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டாம்பூச்சி பூங்கா உள்ளது. கொடைக்கானலிலும் பூங்கா அமைக்க திட்டமிட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
தற்போது அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கொடைக்கானலுக்கு பதிலாக தாண்டிக்குடியில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட வனஅலுவலர் பிரபு கூறுகையில், ‘‘தாண்டிக்குடி மலைப்பகுதியில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளது. முதற்கட்டமாக, அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். பின் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்படும். அனுமதி கிடைத்ததும் பூங்கா அமைக்கப்படும்’’ என்றார்.
கோவையைச் சேர்ந்த பட்டாம்பூச்சி ஆர்வலர் மோகன் பிரசாத் கூறியதாவது: தமிழகத்தில் இருக்கும் 325 வகையான பட்டாம்பூச்சிகளில் 240 வகையான பட்டாம்பூச்சிகளை கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பார்க்கலாம். அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கலாம். இதன் மூலம் பட்டாம்பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தலாம். இதனால் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், மலைப்பகுதிகளில் சுற்றுச்சூழலையும் மேம்படுத்த முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT