Published : 07 Aug 2022 04:00 AM
Last Updated : 07 Aug 2022 04:00 AM

தாம்பரம் அருகே மதுரப்பாக்கம் கிராமத்தில் 18 ஏக்கரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: எதிர்ப்பு தெரிவித்த 26 பேர் கைது

தாம்பரம் அருகே மதுரப்பாக்கம் கிராமத்தில் ஏரி மேல்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த ஜேசிபி இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

தாம்பரம்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட மதுரப்பாக்கம் கிராமத்தில் ஏரி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 18 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 137 பேர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பரங்கிமலை ஒன்றிய செயலாளர் மனோகரன் என்பவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தின் தீர்ப்பைஅவமதித்ததாக கூறி தாம்பரம் வட்டாட்சியர் கவிதாவுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு, அடுத்த வழக்கு விசாரணைவரும் 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடை நம்பி தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகியோர் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

முன்னதாக அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து ஜேசிபி இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மக்கள் உடன்படவில்லை.

மேலும் ஆக்கிரமிப்பு இடையூறாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் வேல் முருகன், துணை தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல் முருகன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 26 பேரை போலீஸார் கைது செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x