Published : 05 Aug 2022 04:15 AM
Last Updated : 05 Aug 2022 04:15 AM

நீலகிரி | பாலாடாவில் விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளம்

உதகை

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்துவரும் நிலையில், மண் சரிவுஏற்படும் அபாயமும் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து இடைவிடாது பெய்ததால், நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான அணைகள்நிரம்பியுள்ளன. ஆறுகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்தோடுகிறது. இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், இரண்டாவது நாளாக நேற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

குந்தா, கூடலூர் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை நீடிக்கும்பட்சத்தில் மரங்கள் விழுவதும், மண் சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

உதகையில் நேற்று காலை 11 மணி முதல் மாலை வரை அவ்வப்போது மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதேபோல, பேருந்து நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையிலுள்ள ரயில்வே பாலத்தின் கீழ் குளம்போல தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. சேரிங்கிராஸ் சாலையில் இருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

உதகை - மஞ்சூர் சாலை பாலாடா பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரம் மீது மரம் விழுந்தது. பாலாடா பகுதியில் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது. கல்லக்கொரை பி.மணியட்டி சாலையோரத்திலுள்ள நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை பழுதடைந்தது.

உதகையில் அதிகபட்ச வெப்பநிலை நேற்று 13 டிகிரி செல்சியஸாக பதிவானது. காற்றில் ஈரப்பதம் 93 சதவீதம் இருந்தது. காற்றின் வேகம் மணிக்கு 6 கிலோ மீட்டராக இருந்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை அளவு (மி.மீ.)

நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தேவாலாவில் 64 மில்லி மீட்டர் மழை பதிவானது. உதகை - 50.3,கோத்தகிரி - 49, மசினகுடி - 40, கல்லட்டி - 36, பந்தலூர் - 34, கேத்தி -34, அப்பர் பவானி -30, சேரங்கோடு - 30, குந்தா - 28, கெத்தை - 27, கோடநாடு - 26, அவலாஞ்சி - 26, குன்னூர் -20.2, எமரால்டு - 12, கூடலூர் - 9 மி.மீ. மழை பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x