Published : 22 Jul 2022 04:00 AM
Last Updated : 22 Jul 2022 04:00 AM
சேலத்தில், வெல்டிங் பணியின்போது பழைய பேருந்தில் இருந்த டீசல் டேங்க் வெடித்து தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
சேலம் கிச்சிப்பாளையத்தை அடுத்த சன்னியாசி குண்டு பகுதியில் பழைய இரும்புக் கடை உள்ளது. அங்கு பழைய பேருந்துகள், லாரிகள் ஆகியவற்றிலுள்ள இரும்பு, தகரம் உள்ளிட்டவற்றை தனியாகப் பிரித்து, இரும்புத் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
நேற்று கடையில் பணிபுரிந்து வந்த ஓமலூரை அடுத்த தண்ணீர் தொட்டிபாளையத்தைச் சேர்ந்த பாஸ்கர் (50) என்பவர் மேற்கூரை உள்ளிட்டவை பிரிக்கப்பட்ட பழைய பேருந்தின் ‘சேஸிஸ்’ உடன் இணைக்கப்பட்ட டீசல் டேங்க்கை வெல்டிங் மூலம் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அதில் சிறிதளவு டீசல் இருந்ததால், அது வெல்டிங் தீயில் வெடித்து தீப்பற்றியது. இதில், பாஸ்கருக்கு, கைகள், மார்பு உள்ளிட்ட இடங்களில் கடும் தீக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.
சேலம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைப் பிரிவில் பாஸ்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிச்சிப்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT