Published : 21 Jul 2022 10:20 PM
Last Updated : 21 Jul 2022 10:20 PM
திருவிடைமருதூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்த மாணவர்களுக்குப் படிப்பில் சுணக்கம் வந்து விடக்கூடாது என அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருவிடைமருதூர் வட்டம், மதகுசாலை, கொள்ளிடம் ஆற்றில் அடித்த செல்லப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கும், மீட்கப்பட்டவரை நேரில் சந்தித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் வியாழக்கிழமை ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது: “ஆற்றில் அதிகளவு தண்ணீர் பெருகி வந்துள்ளது. இதனால் நான்கு பேரில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்ற 3 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இதில் கொளஞ்சிநாதன் என்பவர் மீட்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனோஜ் மற்றும் ஆகாஷ் என்பவர்களது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ராஜேஷ் என்பவரைத் தேடும் பணி நடைபெற்று இருக்கின்றது.
தேடும் பணியினை முடுக்கி விட்டுள்ளோம். சம்பவம் நடந்த 15 நிமிடத்தில் தீயணைப்புத் துறையும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்கும் பணியை இரவு பகல் பாராமல், உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். தண்ணீரில் அடித்த செல்லப்பட்டவர்களின் சகோதரர்களுக்கு, தேவையான உதவியை நாங்கள் செய்ய உள்ளோம். அரசும், மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்தால் அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் தருவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேச உள்ளேன்" என்றார்.
கள்ளக்குறிச்சி பள்ளி தொடர்பான கேள்விக்கு, “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்து அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த மாவட்டத்திற்கு புதியதாக பணியமர்த்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அப்பள்ளியைச் சரிசெய்து, அதில் மாணவர்கள் கல்வியை தொடங்க முடியுமா என்றும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். இதேபோல் அப்பள்ளியின் சுற்றுப் பகுதியிலுள்ள உள்ள 5 அரசு பள்ளிகள் மற்றும் 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரிகள் தயார் நிலையில் உள்ளது.
மேலும், அப்பள்ளி மாணவர்களுக்குப் படிப்பில் சுணக்கம் வந்து விடக்கூடாது என அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம்.
நீதிபதி வழங்கிய தீர்ப்பில், கலவரத்தை அடக்கியதுடன், போலீஸாரின் வேலை முடிந்து விடவில்லை. அதில் சம்பந்தப்பட்டவர்களை யாராக இருந்தாலும், வாட்ஸ் ஆப் மூலம் தகவல்களைப் பரப்பியவர்களை, வீடியோ ஆதாரத்தின் மூலம் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பிற்கு யார் காரணமாக இருந்தாலும், அதற்குரிய பணத்தை அவர்களிடமே வசூல் செய்து, ஈடு கட்ட வேண்டும் என கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT