Published : 21 Jul 2022 04:20 AM
Last Updated : 21 Jul 2022 04:20 AM
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த வித சோதனையும் இன்றி கேரளாவில் இருந்து மக்கள் வாளையாறு வழியாக வாகனங்களில் கோவைக்கு வருவதால், அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் ஒருவருக்கு கேரளாவில் பாதிப்பு உறுதியானதால், தமிழக-கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து, கோவை- கேரள எல்லையான வாளையாறு உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என சோதனை செய்யும் பணிகளை மேற்கொள்ள சுகாதார ஆய்வாளர், வருவாய், காவல்துறையினர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், வாளையாறு சோதனைச் சாவடியில் சுகாதார ஆய்வாளருடன், காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாததால் எந்த வாகனமும் சோதனைச்சாவடியில் நிற்பது இல்லை.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “வாளையாறில் உள்ள சோதனைச்சாவடியானது, பைபாஸ் சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சோதனை செய்ய வேண்டுமெனில், நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை சர்வீஸ் சாலையில் திருப்பிவிட வேண்டும்.
அவ்வாறு திருப்பிவிட யாரும் இல்லாததால், எவ்வித சோதனையும் இன்றி கேரளாவில் இருந்து நேரடியாக நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் கோவை வருகின்றன. அனைத்து துறையினரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சோதனை சாத்தியம். அதற்கேற்ப போதிய பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
பெயரளவில் சோதனைச்சாவடி அமைத்து எந்தப்பயனும் இல்லை. எனவே, வாளையாறில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT