Published : 21 Jul 2022 04:25 AM
Last Updated : 21 Jul 2022 04:25 AM
கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் கரையோரங்களில் சாகுபடி செய்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் முக்கொம்பு மேலணை மற்றும் கல்லணையிலிருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் பிரித்து அனுப்பப்படுகிறது. அதன்படி, கொள்ளிடம் ஆற்றில் ஜுலை 18-ம் தேதி 1.17 லட்சம் கனஅடியும், நேற்று முன்தினம் 98 ஆயிரம் கனஅடியும், நேற்று 77 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் விளாங்குடியிலிருந்து நீரத்தநல்லூர் வரை கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, சோளம், கீரை வகைகள் உள்ளிட்ட பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து வருகின்றன. மேலும், கரையோரங்களில் உள்ள செங்கல் சூளைகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. எனவே, இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுந்தர.விமலநாதன் கூறியது: கல்லணை முதல் நீரத்தநல்லூர் வரை ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வருகின்றன. இவர்கள், உரிய அனுமதியின்றி கரையோரங்களில் சுமார் 10 அடி ஆழத்துக்கும் மேல் மண்ணை எடுப்பதால்தான், ஆற்றின் திசை மாறி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதை வருவாய், பொதுப்பணி, கனிம வளத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் காலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால், கரை உடைத்து கொண்டு கிராமங்களுக்குள்ளும் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலர் கூறியது: கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமித்து செங்கல் சூளை அமைத்துள்ளதாலும், சாகுபடி செய்வதாலும் ஆற்றின் போக்கு மாறி விட்டது. இதனால், ஆற்றில் தண்ணீர் செல்லாமல், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி வழியாகச் சென்று பாதிப்பு ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்பு இல்லாமல் இருந்தால் ஆற்றில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் பாதிப்பு ஏற்படாது என்றார்.
இது குறித்து வருவாய்த் துறையினர் கூறியது: இயற்கை இடர்பாடுகளாலும், பருவமழையாலும் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும். எனினும் இழப்பீடு வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT