Published : 16 Jul 2022 06:16 PM
Last Updated : 16 Jul 2022 06:16 PM

பாரதிதாசன் பல்கலை.யில் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் தட்டுப்பாடு: தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்?

ர. செல்வமுத்துக்குமார்

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை பருவத் தேர்வுவிடைத்தாள்கள் திருத்த ஆசிரியர்கள் வராததால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை பருவத்தேர்வுகளின் விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஜூன் 23-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்பல்கலைக்கழக தேர்வு நெறியாளர், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘‘பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை பருவத்தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்கள் வருகைமிகக் குறைவாக உள்ளதால், தேர்வு முடிவுகளை குறித்த நேரத்தில்அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுக்குரிய ஆசிரியர்கள் அவ்விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில்பங்கேற்க வேண்டும். மேலும், இதற்கு கல்லூரி முதல்வர்களும் முழு ஒத்துழைப்பு தந்து ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏன்?- இதுவரை இல்லாத அளவுக்கு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வர தயக்கம் காட்டுவது ஏன் என்பது குறித்து விசாரித்தபோது, கல்லூரி ஆசிரியர்கள் சிலர் கூறியது, "நிகழாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகி, தற்போது மாணவர் சேர்க்கைநடைபெற்று வருவதால், பெரும்பாலான தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பவில்லை. இதனால் இந்த ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணியில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

வழக்கமாக ஒரு நாளைக்கு காலை 20, மாலை 20 என 40 விடைத்தாள்கள் மட்டுமே திருத்தப்படும். ஆனால், தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு60 முதல் 70 விடைத்தாள்களை திருத்தும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக விடைத்தாள் திருத்த வரும் சில ஆசிரியர்களும் ஓரிரு நாட்களுக்கு மேல் பணிக்கு வருவதில்லை. மேலும், ஒரு விடைத்தாள் திருத்த பல ஆண்டுகளாக ரூ.12 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்காததாலும் பலர் இந்தப் பணியை தவிர்த்துவிடுகின்றனர்.

அத்துடன், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் தேர்வு நெறியாளர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு நிர்வாகி மட்டுமே உள்ளார்" என்றனர்.

விரைந்து வெளியிட முயற்சி: இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளரிடம் (பொ)சு.ஸ்ரீனிவாச ராகவனிடம் கேட்டபோது, ‘‘இது வழக்கமாக அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும் சுற்றறிக்கைதான். விடைத்தாள்கள் மதிப்பீட்டுப்பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. முடிந்த வரை விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிட முயற்சித்து வருகிறோம்” என்றார்.

கண்டிப்பான உத்தரவு தேவை: இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் க.பாண்டியன் கூறியது: "குறிப்பிட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு செல்ல முடியும். ஆனால், சமீபகாலமாக பல தனியார் கல்லூரிகள் ஊதிய செலவுகளை மிச்சப்படுத்தும் நோக்கில், மிகக்குறைவாக பணி அனுபவம் கொண்ட ஆசிரியர்களை வைத்து வகுப்புகள் நடத்துகின்றனர்.

இதேபோல, இப்பல்கலைக்கழகத்தில் கீழ் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்த அனுமதி இல்லை. பாடம் நடத்தும்போது மட்டும் தகுதியானவர்களாக கருதப்படும் இவர்கள், விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு தகுதி இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

எனவே, இப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றால் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் கண்டிப்பாக குறிப்பிட்ட எண்ணிக்கையில், தகுதியான ஆசிரியர்கள் விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கவேண்டும். அரசுக் கல்லூரிகளில் தற்காலிகமாக பணிபுரிபவர்களையும் விடைத்தாள் திருத்த அனுமதிக்க வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உடனடியாக நிரந்தர தேர்வு நெறியாளரை நியமிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x