Published : 11 Jul 2022 05:14 PM
Last Updated : 11 Jul 2022 05:14 PM
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை பட்டவொர்த் சாலையில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட புராதன பூங்கா பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், அதை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி பட்டவொர்த் சாலையில் 1.27 ஏக்கரில் ரூ.6 கோடி மதிப்பில் புராதன பூங்கா கட்டப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் கற்களால் செதுக்கப்பட்ட 2 குதிரைகள் வரவேற்கும் நுழைவாயில், ஆம்பி தியேட்டர், 50 அடியில் முழு நீள நீரூற்றுகள், பாதசாரிகள் நடைபாதைகள், குழந்தைகள் விளையாடும் பகுதி, பூச்செடிகள் மற்றும் மூலிகைச் செடிகள் கொண்ட தோட்டம் என பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும், திருச்சியை 3-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை ஆண்ட சோழர்கள், பல்லவர்கள், விஜய நகர பேரரசர்கள், மராத்தியர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வரை அவர்களது ஆட்சியை விளக்கும் மாடங்களும், மன்னர்களின் உருவச்சிலையும் அமைத்து மக்களுக்கு வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதுதவிர, பூங்காவில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதிகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட உள்ளன.
2019-ம் ஆண்டு தொடங்கிய பூங்காவின் கட்டுமானப் பணிகள் 6 மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு, 2020-ம் ஆண்டுகோடை விடுமுறையில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டது. பின்னர், கரோனா ஊரடங்கு காரணமாக, பூங்கா அமைக்கும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதால் பூங்கா அமைவது தாமதமானது.
பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் பூங்கா முழுமை பெறவில்லை. இதற்கு, பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. பின்னர், சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டதால் பூங்கா அமைப்பில் மாற்றங்களும், மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே கட்டுமானப் பணிகள் தாமதமானது.
தற்போது, அனைத்தும் சரிசெய்யப்பட்டு 70 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்னும், 3 மாதங்களுக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, புராதன பூங்கா மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.
மலைக்கோட்டை அருகே நகரத்தின் மையப்பகுதியில் 3 ஆண்டுகளாக பூங்கா கட்டப்பட்டு வருவதால், இந்த பூங்கா குறித்த மக்களின் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.
இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கே திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக அது நடக்கவில்லை. எனவே, புராதன பூங்கா பணிகளை விரைந்து முடித்து, வெகுவிரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT