Published : 08 Jul 2022 04:30 AM
Last Updated : 08 Jul 2022 04:30 AM
கும்பகோணத்தை அடுத்த பழையாறை கிராமத்தில் முடிகொண்டான் ஆற்றில் புதிதாக அமைக்கப்பட்ட கதவணையில் ஷட்டர் பொருத்தப்படாத நிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல்வயல்களில் தேங்கியது. பின்னர், விவசாயிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து அங்கு நேற்று மாலை ஷட்டர் அமைக்கப்பட்டது.
கும்பகோணத்தை அடுத்த பழையாறை கிராமம் முடிகொண்டான் ஆற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கதவணை அமைக்கப்பட்டது. இந்த கதவணை மூலம் கீழப்பழையாறை, மேலப்பழையாறை கிராமங்களில் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கதவணை சேதமடைந்ததைத் தொடர்ந்து, சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, அங்கு கடந்த மே மாதம் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கதவணை கட்டப்பட்டது. ஆனால்,கதவணையில் ஷட்டர் அமைக்கப்படவில்லை. இந்நிலையில், சாகுபடிக்காக முடிகொண்டான் ஆற்றில் கடந்த 3 தினங்களுக்கு முன் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், கதவணையில் ஷட்டர் அமைக்கப்படாததால், திறந்துவிடப்படும் தண்ணீர் முழுவதும் வெளியேறி பழையாறையிலுள்ள சுமார் 200 ஏக்கர் நடவு வயலில் 3 நாட்களாக தேங்கி நிற்கிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியது: பழையாறை கிராமத்தில் முடிகொண்டான் ஆற்றில் கடந்த ஒன்றரைமாதத்துக்கு முன் கட்டப்பட்ட கதவணையில் ஷட்டர் பொருத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் நெல் சாகுபடி செய்து விட்டோம். ஆனால், கதவணையில் ஷட்டர் அமைக்காமல் இருந்ததால், முடிகொண்டான் ஆற்றில் சாகுபடிக்காக, கடந்த 3 நாட்களுக்கு முன் திறந்து விடப்பட்ட தண்ணீர் வெளியேறி 200 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட வயல்களில் தேங்கியுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே தண்ணீர் திறந்ததால், ஷட்டர் அமைப்பதற்குள் தண்ணீர் வந்து விட்டது. அங்கு நேற்று மாலைஷட்டர் பொருத்தப்பட்டு விட்டது. மேலும், முடிகொண்டான் ஆற்றில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு, வயல்களில் உள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT