Published : 06 Jul 2022 04:00 AM
Last Updated : 06 Jul 2022 04:00 AM
பக்ரீத் பண்டிகையையொட்டி, பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் நேற்று ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதுடன், கடந்த ஆண்டைவிட ரூ.3 கோடி வர்த்தகம் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டுச் சந்தை உள்ளது. வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் சந்தை நடைபெறுகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
வரும் 10-ம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி, நேற்று நடைபெற்ற சந்தைக்கு கேரளாவில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து 3500-க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. காலை முதலே சந்தை களைகட்டியது. மழை பெய்தாலும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் செல்வராஜ் கூறும்போது, "பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து 3,500 மாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன. பக்ரீத் பண்டிகையையொட்டி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாட்டு காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், முரா ரக எருமை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், ஜெர்சி ரக பசு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், ஜெர்சி ஹெச்எஃப் ரக பசு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும் விற்பனையானது. மொத்தம் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.3 கோடி அதிகம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT