Published : 03 Jul 2022 04:30 AM
Last Updated : 03 Jul 2022 04:30 AM

நாகர்கோவில் | திட்டமிடலின்றி சாலை விரிவாக்கப் பணி - நெரிசலில் மக்கள் சிக்கித் தவிப்பு

நாகர்கோவில் நீதிமன்ற சாலை விரிவாக்க பணியின்போது தரைத்தள கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் இன்டர்நெட் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. சாலையின் அகலம் பாதியாக குறைந்ததால் வாகனங்கள் திணறியபடி செல்கின்றன. படம்: எல்.மோகன்.

நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் முறையான திட்டமிடலின்றி நடந்து வரும் சாலை விரிவாக்கம், பாதாளச் சாக்கடை சீரமைப்பு மற்றும் குடிநீர் திட்டப் பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

நாகர்கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்தே பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஓராண்டுக்குள் பாதாளச் சாக்கடைப் பணி நிறைவடைந்து விடும் என்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மாநகராட்சியான பிறகும் இதே நிலைதான் தொடர்கிறது. நாகர்கோவில் நீதிமன்ற சாலை, பாலமோர் சாலை, கோட்டாறு - பார்வதிபுரம் சாலை, பொதுப்பணித்துறை சாலை, வடசேரி, வெட்டூர்ணிமடம், ஒழுகினசேரி, செட்டிக்குளம், ராமன்புதூர் என அனைத்துப் பகுதிகளிலும் இப்பணிகள் 12 ஆண்டுகளாக நடந்து கொண்டே இருப்பதால், மக்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.

பாதாளச் சாக்கடைப் பணி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாகவும், இந்தஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிடும் எனவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோட்டாறு உட்படமுக்கிய பகுதிகளில் மீண்டும் சாலையோரமாகவும், சாலையின் குறுக்காகவும் பல இடங்களில் பள்ளம் தோண்டிக்கொண்டுள்ளனர். மற்றொருபுறம் பாதாளச் சாக்கடைப் பணி நிறைவடைந்து சீரமைக்கப்பட்ட சாலைகள், புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிக்காக மீண்டும் தோண்டப்பட்டு துவம்சம் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து, கடந்த மாநகராட்சி கூட்டத்தில் பொதுமக்களின் குமுறலைகவுன்சிலர்கள் வெளிப்படுத்தினர். “சாலைகளை ஒவ்வொரு திட்டத்துக்காக ஒவ்வொரு முறையும் தோண்டாமல் பணிகள் ஒழுங்குபடுத்தப்படும்” என மேயர் மகேஷ் உறுதியளித்திருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக திட்டப் பணிகள் என்ற பெயரில் மீண்டும் சாலைகளை சின்னாபின்னமாக்கி வருகின்றனர். அரசுக்கு நிதிஇழப்பு அதிகரிப்பது ஒருபுறமிருக்க, நாகர்கோவிலின் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகின்றன.

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து டதி பள்ளி சந்திப்புக்கு வரும் திருப்பத்தில் சாலை விரிவாக்கத்துக்காக மிகப்பெரிய அளவில்தோண்டப்பட்டுள்ளது.

இதனால், ஆட்சியர் அலுவலகம் முன்புறம் கடும்போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. சரியான திட்டமிடலின்றி பள்ளம் தோண்டியதில் பூமிக்கு அடியில் இருந்தபி.எஸ்.என்.எல். உட்பட பல்வேறு கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நாகர்கோவில் நீதிமன்ற சாலையிலும் இதே நிலைதான்.

இதனால் நாகர்கோவில் மற்றும்சுற்றுப்புற பகுதிகளில் தொலைத்தொடர்பு மற்றும் இன்டர்நெட் சேவைகள்பாதிக்கப்பட்டுள்ளன. முறையான முன்னறிவிப்பு, திட்டமிடலின்றி நாகர்கோவில் பகுதிகளில் சாலைகள் தொடர்ந்து தோண்டப்பட்டு வருவதால் பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சிறிதும், பெரிதுமாக விபத்துகள் தினந்தோறும் நடக்கின்றன.

மேயர் அறிவித்ததுபோல் இந்த ஆண்டுக்குள் பணி முடிந்து விடுமா? அல்லது இன்னும் தொடருமா? என அனைத்து தரப்பு மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x