Published : 01 Jul 2022 04:06 PM
Last Updated : 01 Jul 2022 04:06 PM
திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு இன்று (ஜூலை 1) முதல் கார்கோ சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நியச் செலாவணி பாதிக்கப்படும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை, திருச்சி,மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவை அளித்து வருகிறது. அதன்படி, தினசரி சென்னைக்கு 3 சேவையும், திருச்சிக்கு 3 சேவையும், மதுரைக்கு ஒரு சேவையும் அளித்துவந்தது. ஆனால், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு காரணமாக சென்னைக்கு 2 விமான சேவையும், திருச்சிக்கு ஒரு விமான சேவையும், மதுரைக்கு வாரத்துக்கு 3 சேவையும் என குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று(ஜூலை 1) முதல் கார்கோ சேவையை நிறுத்திக்கொள்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த 10 டன் பொருட்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் ஏற்றுமதி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ”சென்னை, திருச்சியில் இருந்து நாளொன்றுக்கு முறையே 5, 2.5 டன்னும், மதுரையில் இருந்து வாரத்துக்கு 7.5 டன்னும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மறு அறிவிப்பு வரும் வரை ஜூலை 1-ம் தேதி(இன்று) முதல் கார்கோ சேவையை நிறுத்திக் கொள்வதாக திடீரெனஅறிவித்திருப்பது அதிர்ச்சியடைய செய்துள்ளது. முன்கூட்டியே அறிவிக்காததால் ஏற்கெனவே தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நாளொன்றுக்கு ரூ. 9 லட்சம் அந்நிய செலாவணி பாதிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT