Published : 01 Jul 2022 07:05 AM
Last Updated : 01 Jul 2022 07:05 AM
குடியிருப்புகள் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தனி வீடு மற்றும் வீட்டு கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு நிலத்தடி நீர் எடுப்பதற்கு எவ்வித அனுமதியோ, தடையின்மைச் சான்றோ பெறத் தேவையில்லை என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்க பல்வேறுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நிலத்தடி நீரின் அளவு, தரம் ஆகியவை நீர்வளத் துறையின் கீழ் இயங்கும் நிலத்தடி நீராதார அமைப்பால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் உள்ள 1,166 குறுவட்டங்களும் 5 வகைகளாகப்பிரிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. அதில் 435 குறு வட்டங்களில் அதிக நுகர்வு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் வளத்தை ஒழுங்குபடுத்தவும், நிர்வகிக்கவும் 2003-ல் தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. பின்னர், நடைமுறைச் சிக்கல்களால் 2013-ல் இச்சட்டம் நீக்கப்பட்டது.
2019-ல் நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மைச் சட்டத்தை உருவாக்க உயர்நிலைக் குழுவும்,வரைவு சட்டம், விதிகளுக்காக தொழில்நுட்பக் குழுவும் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து, தொழில்நுட்பக் குழு ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் பல்வேறு மாநில சட்டங்களின் அடிப்படையில் நிலத்தடி நீர் வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டது.
புதிய சட்டம் இயற்றுவதற்கான அறிவிப்பு 2021-22-ம் ஆண்டுஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. மேலும், தலைமைச் செயலர் தலைமையிலான உயர்நிலைக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, மக்களின் கருத்து கேட்பதற்காக பொதுத் தளத்தில் குறிப்பாணையாக வெளியிட அரசு உத்தேசித்துள்ளது.
இந்நிலையில், மத்திய நிலத்தடிநீர் ஆணையம் கடந்த ஏப்ரலில்வெளியிட்ட அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில், "நீச்சல் குளம், சுரங்கத் திட்டங்கள்,உட்கட்டமைப்பு, தொழிற்சாலைகள், தண்ணீர் விநியோகிப்பாளர்கள், குடியிருப்பாளர் நலச் சங்கங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட அனைத்துநிலத்தடி நீர் பயன்பாட்டாளர்களும், ஜூன் 30-ம் தேதிக்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம், நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற வேண்டும்.
விண்ணப்பம் அளிக்கும்போது ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்.அவ்வாறு மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் தடையின்மை சான்று பெறாமல் தொடர்ந்து நிலத்தடி நீர் எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், தனி வீடு வைத்திருப்போர், குடியிருப்புதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசின் நீர்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசின் நீர்வளக் கொள்கைபடி, தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இதர வணிகப் பயன்பாட்டுக்காக நீர் எடுக்கும் நிறுவனங்களுக்குத்தான் தடையின்மை சான்று அல்லது அனுமதி அவசியம். வீட்டு உபயோகம் மற்றும் வேளாண்மைப் பயன்பாட்டுக்குத் தேவையில்லை.
2012-ல் தமிழக அரசு வெளியிட்ட நிலத்தடி நீர் மேலாண்மை தொடர்பான அரசாணையில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதில், தனி வீடுகள், குடியிருப்புகள், அரசின் குடிநீர் விநியோகத் திட்டங்கள் மற்றும்நீர் பயன்பாடில்லாத தொழிற்சாலைகளுக்கு தடையின்மைச் சான்று பெறுவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், தமிழகத்தைப் போன்று தனியாக நிலத்தடி நீர் கண்காணிப்புப் பிரிவு இல்லாமல், மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் கீழ் வரும் சில மாநிலங்கள், ஆணையத்தின் அறிவிப்பைப் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.
மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீர்வளத் துறை அல்லது நிலத்தடி நீர் தகவல் அமைப்பு, தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT