Published : 09 Jun 2014 09:49 AM
Last Updated : 09 Jun 2014 09:49 AM

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்காதது வருத்தம் அளிக்கிறது: இந்திய அணி கேப்டன் தோனி

ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்காதது வருத்தம் அளிக்கிறது என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.

சென்னை பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி டிரங்க் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டிஆர்ஆர் கண் மருத்துவமனை (DRR EYE CARE & OCULOPLASTY HOSPITAL) திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. மருத்துவமனை நிர்வாக இயக்குநர்கள் டாக்டர் உதய்குமார், டாக்டர் ப்ரீத்தி உதய் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, கண் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘‘ஏழாவது ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்காதது வருத்தம் அளிக்கிறது. அடுத்தமுறை ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னை ரசிகர்களின் ஆதரவு ஊக்கம் அளிக்கிறது’’ என்றார்.

போக்குவரத்து பாதிப்பு

விழாவுக்கு தோனி வருவது தெரிந்ததும் ஆயிரத்துக்கும் அதிகமான கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால், கரையான்சாவடி டிரங்க் சாலையில் 10.30 முதல் 11.30 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒரு கி.மீ. தூரத்துக்கு வரிசையில் நின்றன.

தோனியை பார்க்கும் ஆவலில் இளைஞர்கள் சாலை தடுப்புச்சுவர் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் ஏறி நின்றிருந்தனர். பலர் தோனியை தங்களது செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர். ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x