Published : 16 Jun 2022 07:44 AM
Last Updated : 16 Jun 2022 07:44 AM
சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ளாவிட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஸ் குமார் எச்சரித்துள்ளார்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை உரிய பாதுகாப்போடு மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில், வாரிய மேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஸ் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.241 கோடியே 36 லட்சத்தில் மணலி, சின்னசேக்காடு, காரம்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முக்கிய சாலைகளில் பிரதான குழாய்கள் பதித்தல், இயந்திர நுழைவாயில்கள் அமைத்தல் மற்றும் வீட்டு இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக பிரதான குழாய்கள் பதிப்பதற்கான பணிகள் நடைபெறும்போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இயந்திர நுழைவாயில்கள் அமைக்கப்படும் இடங்களில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் எடுக்க வேண்டும். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். பணிகள் நடைபெறுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தைச் சுற்றி தடுப்பு பலகைகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
மேலும், பணிகள் நிறைவுற்ற பின்னர் பிரதான குழாய்கள் பதிப்பதற்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடி வாகனங்கள் செல்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியாளர்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தகுந்த பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரங்களில் ஒளிரும் தகவல் பலகைகள் வைக்கப்படுவதோடு பணியாளர்கள் ஒளிரும் உடைகள் அணிந்து பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.
வாரியம் சார்பில் திடீர் தணிக்கைகள் மேற்கொள்ளும்போது பாதுகாப்பு பணிகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின்மீது உரிய சட்ட விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், வாரிய செயல் இயக்குநர் எஸ்.ராஜ கோபால் சுங்காரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT