Published : 06 Jun 2022 04:54 AM
Last Updated : 06 Jun 2022 04:54 AM
கர்ப்பிணிகளுக்கான தாய் - சேய் நல பெட்டகத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடர், இரும்புச் சத்து டானிக்கை ஆவினை நிராகரித்து தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்படுகிறது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் கர்ப்பிணிகளுக்கான தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், இடம் பெற்றுள்ள தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பவுடரை தனியார் நிறுவனத்துக்கு பதிலாக ஆவின் நிறுவனத்திடம் கொள்முதல் செய்து பயன்படுத்தலாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அதிகாரிகள், மாநில அரசின் திட்டக்குழுவினர் கடந்த மார்ச் 31-ம் தேதி நடந்த கூட்டத்தில் முடிவு செய்தனர்.
ஆனால், ஏப்ரலில் அரசின் நிர்ப்பந்ததால் அந்த முடிவை நிராகரித்து, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளனர். கர்ப்பிணிகளுக்காக 2 ஆண்டுகளுக்கு 23 லட்சத்து 88 ஆயிரம் தொகுப்புகளை தமிழக அரசு வாங்குகிறது. இதற்காக, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு ரூ.450 கோடிக்குஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பை வழங்கியதும் இதே நிறுவனம்தான்.
ஆவின் பொருளை காட்டிலும் தனியார் நிறுவனத்தின் ஊட்டச்சத்து பவுடர் விலை60 சதவீதம் அதிகம். இதனால் தமிழகஅரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் ரூ.100 கோடி பணம் கைமாறியுள்ளது. தாய் - சேய் நல பெட்டகத்தில் இடம் பெற்றுள்ள இரும்புச் சத்து டானிக்கை அதே தனியார் நிறுவனத்திடம் வாங்கியதால் அரசுக்கு ரூ.32 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த 2 பொருட்கள் கொள்முதலில் தமிழக அரசுக்கு மொத்தம் ரூ.77 கோடி இழப்பு ஏற்படுகிறது.
தாய் - சேய் நல பெட்டகத்தில் ஆவின்பொருளை நிராகரித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கஉள்ளோம். நடவடிக்கை இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவோம். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெளிவுபடுத்த வேண்டும்.
பொதுவாக ஒரு நிலத்தை பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 200 நாள் ஆகும். ஆனால், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று கோவையில் 122 ஏக்கருக்கான லே அவுட் அனுமதியை 8 நாளில் பெற்றுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிஎம்டிஏவில் நில அனுமதி பெற ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கூறியது. குறிப்பிட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் பதிவு செய்யும் நேரத்தில் மட்டுமேஆன்லைன் பதிவு இயக்கத்தில் உள்ளது.அந்த நிறுவனத்துக்கு உதவ திமுகவினர் சிஎம்டிஏ-வில் சிஇஓ என்ற புதிய பொறுப்பை உருவாக்கியுள்ளனர். அந்ததனியார் நிறுவனம் தற்போது 6 புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதுகுறித்து, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி பதில் கூற வேண்டும்.
இந்த விவகாரங்களில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனத்தை இன்னும் ஏன் முதல்வர் தடை செய்யவில்லை. வரும் 20-ம் தேதிக்கு பிறகு திமுகவின் ஊழல், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவை குறித்து புத்தகமாக ஆளுநரிடம் வழங்க உள்ளோம். நான் வெளியிடும் ஆவணங்கள் அனைத்தும் அரசு ஊழியர்கள் எங்களிடம் வழங்கியதுதான்.
தமிழகத்தில் 70 சதவீதம் மக்கள் திமுக எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். 20 சதவீதம் பேர் தேசிய அரசியலுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, அதி முகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது.
அதிமுக குறித்து தலைமையின் உத்தரவு இல்லாமல் எந்த கருத்தையும் பேசக் கூடாது என பாஜகவினருக்கு கூறியுள்ளோம். எங்கள் கட்சி குறித்து அதிமுகவினர் சிலர் தவறான கருத்தை கூறினாலும் அதை ஓ.பன்னீர் செல்வம், பழனிசாமி ஏற்க மாட்டார்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எங்களது கூட்டணியில் இணைந்து தனது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சித்தால்கூட சரியான முடிவாகவே இருக்கும். இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும் என்பது சீமானுக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT