Published : 05 Jun 2022 04:00 AM
Last Updated : 05 Jun 2022 04:00 AM
காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலில் குளித்தபோது மூழ்கி மாயமான பாலிடெக்னிக் மாணவர் நீண்ட தேடுதலுக்குப் பிறகு சடலமாக கரை ஒதுங்கினார்.
சென்னை, தண்டையார்பேட்டை, ஐ.ஓ.சி. பகுதியை சேர்ந்தவர்கள் முகமது இஜாஸ் (17), கிஷோர் குமார் (17), மகேஷ் குமார் (17), ஜெகதீஷ் (17). இவர்கள் நான்கு பேரும் நண்பர்கள். புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இவர்கள் 4 பேரும், பாலிடெக்னிக் செல்லாமல், மதியம் 2 மணியளவில், காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடல் பகுதிக்கு சென்று குளித்தனர்.
அப்போது, 4 பேரும் கடலில் மூழ்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக படகில் வந்த மீனவர்கள் அவர்களை காப்பாற்றினர். ஆனால், முகமது இஜாஸ் மட்டும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள், கடலோர காவல் படையினர் ஆகியோர் மாயமான மாணவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் காசிமேடு கடற்கரையில் முகமது இஜாஸ் உடல் ஒதுங்கியது. போலீஸார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சென்னை மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் கடலில் குளித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சாய்சரண் (21) ராட்சத அலையில் சிக்கி மாயமானார். சென்னை சேத்துப்பட்டில் நடந்த உறவினர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அவர், நிகழ்ச்சி முடிந்த பிறகு நண்பர்களுடன் வந்து மெரினா கடற்கரையில் குளித்த போது அலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT