Published : 01 Jun 2022 07:38 AM
Last Updated : 01 Jun 2022 07:38 AM

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நீதித்துறையும், வனத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

உதகை: சுற்றுச்சூழலை பாதுகாக்க நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயலாற்ற வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அறிவுறுத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில்உள்ள தமிழக விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. வனத்துறை தலைமை முதன்மை வனப் பாதுகாவலர் சையது முஸமில் அப்பாஸ் வரவேற்றார்.

மாநாட்டை தொடங்கிவைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசியதாவது: வனத்தை அழித்தால் நாமும் அழிந்து விடுவோம். வனங்களை பாதுகாக்கவே நீதித்துறை உத்தரவுகளை பிறப்பிக்கிறது. நாட்டில் அதிக வனப்பரப்பை கொண்ட பகுதிகளில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது.

வனங்களில் களை செடிகள், அந்நிய தாவரங்கள், பிளாஸ்டிக், மது பாட்டில்களை அகற்ற மனிதஆற்றல் மற்றும் நிதி தேவைப்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருந்தால், இந்த நிதியை வளர்ச்சிப் பணிக்கு பயன்படுத்தலாம்.

காலநிலை மாற்றத்தால் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படுகிறது. தமிழகத்தில் அதிகளவில் நீர்நிலைகள் உள்ளன. ஆனால், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் மக்கள் தண்ணீருக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவே நீதிமன்றம் தலையிடுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க இரு துறைகளும் இணைந்து செயலாற்ற வேண்டும். சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் அவற்றை சீரமைப்பது முக்கியம் என்றார்.

தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ரவீந்திரன் நன்றி கூறினார். மாநாட்டில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் பவானி, என்.சதீஷ்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x