Published : 29 May 2022 04:15 AM
Last Updated : 29 May 2022 04:15 AM
கோவை சி.எம்.சி காலனியில், 5 தளங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. கோயிலை இடிக்க எதிர்ப்பு காரணமாக, ஒரு குடியிருப்பு மட்டும் மாற்று இடத்தில் கட்டப்படுகிறது.
கோவை வெரைட்டிஹால் சாலை சி.எம்.சி காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், குடும்பத்துடன் வசிக்கின்றனர். தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட 26 கட்டிடங்களில் உள்ள 432 வீடுகளில் மக்கள் வசித்து வந்தனர். கடந்த 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்குடியிருப்புகள் பழுதடைந்ததால், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.45 கோடி மதிப்பில் 448 வீடுகள் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சி.எம்.சி காலனியின் ஒரு பகுதியில் பொதுமக்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. பழுதடைந்த பழைய குடியிருப்புகள் கடந்தாண்டு இறுதியில் இடிக்கப்பட்டன. அரசு ஒப்புதல் பெற்று தகுந்த ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பணியாணை வழங்கப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணி குறிப்பிட்ட காலத்தில் தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து சி.எம்.சி காலனியைச் சேர்ந்த சதீஷ் கூறும்போது, ‘‘சி.எம்.சி காலனியில் பழமைவாய்ந்த மதுரை வீரன் கோயில் உள்ளது. முன்பு இக்கோயிலை இடித்துவிட்டு, அங்கு கட்டிடம் கட்ட திட்டவடிவம் தயாரிக்கப்பட்டிருந்தது. கோயிலை மாற்று இடத்தில் கட்டித் தருவதாக தெரிவித்தனர். ஆனால், கோயிலை இடிக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இதையடுத்து, கோயிலை இடிக்கும் முடிவை கைவிட்டு, அங்கு வர வேண்டிய கட்டிடத்தை மாற்று இடத்தில் கட்டித் தருவதாக தெரிவித்துள்ளனர். புதிய குடியிருப்புகள் கட்டும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். தற்போது நாங்கள் தற்காலிகமாக வசிக்கும் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு சாலை அமைத்துத் தர வேண்டும்’’ என்றார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கோவை செயற்பொறியாளர் வெங்கடேஷ் கூறும்போது, ‘‘வெரைட்டிஹால் ரோடு சி.எம்.சி காலனியில் மொத்தம் 5 கட்டிடங்கள் (பிளாக்குகள்) கட்டப்படவுள்ளன. இதில் ஒரு கட்டிடம், கோயில் இருந்த இடத்தில் கட்டப்படுவதாக இருந்தது. அப்பகுதி மக்கள் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு வர வேண்டிய கட்டிடம், அருகே வேறு இடத்தில் வரும் வகையில் திட்ட வடிவம் மாற்றப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அந்த குறிப்பிட்ட பிளாக்குக்கான கட்டுமானப் பணி தொடங்கும். அதேவேளையில், மற்ற பிளாக்குகள் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.
உதவி செயற்பொறியாளர் விஜயமோகன் கூறும்போது, ‘‘இங்கு மொத்தம் 448 வீடுகள் கட்டப்படவுள்ளன. ஒவ்வொரு பிளாக்கும் 5 தளங்களை கொண்டதாகும். ஒவ்வொரு வீடும் தலா 400 சதுரடி பரப்பளவில் ஒரு படுக்கையறை, சமையல் அறை, ஹால் ஆகியவை இருக்கும் வகையில் கட்டப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் கட்டுமானப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 5 தளங்கள் என்பதால் படிக்கட்டுடன், லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்படும். குடிநீர், உப்புநீர் குழாய் வசதி செய்யப்படும். தற்போது 2 பிளாக்குகளில் அடித்தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட மாதங்களுக்குள் அனைத்து பிளாக்குகளின் கட்டுமானப் பணிகளும் முடிக்கப்படும்’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT