Published : 04 Jun 2014 09:39 AM
Last Updated : 04 Jun 2014 09:39 AM

கருணாநிதி 91-வது பிறந்தநாள் விழா: கூட்டணி தலைவர்கள், திமுகவினர் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதியின் 91-வது பிறந்த நாள் விழா, செவ்வாய்க்கிழமை கோலாகல மாகக் கொண்டாடப்பட்டது. தனது பிறந்தநாளையொட்டி, அதிகாலையில் சிஐடி காலனியில் உள்ள வீட்டில் கருணாநிதி மரக்கன்று நட்டார். அவருக்கு ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்ற கருணாநிதி, அங்கு பெற்றோர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். கருணாநிதிக்கு தயாளு அம்மாள், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழரசு மற்றும் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் கருணாநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மீண்டும் கோபாலபுரம் வந்த அவருக்கு முக்கியப் பிரமுகர்கள், திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கவர்னர் ரோசய்யா பூங்கொத்து அனுப்பியிருந்தார். போனிலும் வாழ்த்து கூறினார். நடிகர் ரஜினிகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் போனில் வாழ்த்து கூறினர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்துக் கடிதம் கொடுத்தனுப்பினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் நிர்வாகிகள் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா ஆகியோர் வீட்டுக்கு வந்து கருணாநிதியை வாழ்த்தினர்.

காலை 11.15 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த கருணாநிதிக்கு தாரை, தப்பட்டை முழங்க திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கலைஞர் அரங்கில் நடந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்று தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர்மொய்தீன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்துக் கூறினர். திமுக நிர்வாகிகள் நீண்ட வரிசையில் நின்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருவண்ணாமலை இளைஞரணி நிர்வாகி தரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சீர்வரிசைத் தட்டுகளை பரிசளித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் தொண்டர்களை சந்தித்த கருணாநிதி, பின்னர் சிஐடி காலனி இல்லத்துக்கு திரும்பினார். கருணாநிதியின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை தென்சென்னை மாவட்ட திமுகவினர் செய்திருந்தனர்.

முன்னதாக திங்கள்கிழமை இரவு காமராஜர் அரங்கில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் வாழ்த்தரங்கம் நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் படித்து, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கும், ஐஐடி தேர்வில் வெற்றி பெற்ற மூன்று மாணவிகளுக்கும், ஒரு மாற்றுத் திறனாளி மாணவிக்கும் இலவசமாக மடிக் கணினி வழங்கப்பட்டது.

வடசென்னை மாவட்ட நிர்வாகி சேகர்பாபு ஏற்பாட்டில், பெரியார் திடலில் கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்தரங்கம் நடந்தது.

செல்போன்கள் காணவில்லை

கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடந்த கலைஞர் அரங்கில் மேளதாள நிகழ்ச்சியுடன் கட்சியினர் சிலர் உற்சாகத்தில் நடனமாடினர். அரங்குக் குள் நுழையும் வழியில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. இதில் செய்தி சேகரிக்க வந்த இரண்டு செய்தி யாளர் களின் விலை உயர்ந்த செல்போன்கள் காணாமல் போயின. மற்றொரு செய்தி யாளர் பர்ஸை பறிகொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x