Published : 22 Jun 2014 11:06 AM
Last Updated : 22 Jun 2014 11:06 AM

மார்ச்சுக்குள் 2000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்: அமைச்சர் நத்தம் விசுவநாதன் தகவல்

தமிழகத்தில் பல்வேறு புதிய மின்திட்டங்கள் மூலம் வரும் மார்ச் மாதத்துக்குள் 2000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும் என்று என்று மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

தேசிய குறுந்தொழில் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இதில் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:

3 கட்டமாக மின்திட்டப் பணிகள்

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை தற்போது தீர்ந்துள்ளது. இந்த நிலைமை தொடர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சினையை தீர்க்க முதல்வர் ஆலோசனைப்படி மூன்றுகட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மின் திட்டங்களை சரியாக இயங்கச் செய்வது, புதிதாக தொடங்கவுள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்து வது, எதிர்கால தேவைகளை கணக் கில் கொண்டு புதிய திட்டங்களை உருவாக்குவது என மூன்றாகப் பிரித்து திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மின் தேவை 12000 மெகாவாட்டாக இருந்தது. உற்பத்தியோ 8000 மெகாவாட்தான். இதையடுத்து, கிடப்பில் கிடந்த மின் திட்டங்களை செயல்படுத்தி 3 ஆண்டுகளில் 2000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டது. இது மட்டுமன்றி வல்லூர் அனல் மின் திட்டம், தூத்துக்குடியில் கூட்டு மின் திட்டம், நெய்வேலியில் 2-வது நிலை மின்திட்ட விரிவாக்கம், கூடங்குளம் அணுமின் திட்டம் 2-வது அலகு ஆகியவை மூலம் வரும் மார்ச் மாதத்துக்குள் 2000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்.

இது தவிர உடன்குடி, உப்பூர், எண்ணூர், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய இடங்களில் 5000 மெகாவாட்டுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மின் மிகை மாநிலங்களில் இருந்து மின் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு மின் வழித்தடம் ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு நத்தம் விசுவநாதன் கூறினார்.

தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறுகையில், ‘‘பெரும் தொழில் நிறுவனங்கள் வருவதால் சிறு தொழில் நிறுவனங்கள் நசிந்துவிடும் என்று நினைக்கக் கூடாது. பன்னாட்டு நிறுவங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது’’ என்றார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x