Published : 15 May 2022 04:15 AM
Last Updated : 15 May 2022 04:15 AM
கரோனா தடுப்பூசி போடப்பட்டதால்தான் கரோனா 3-வது அலை கட்டுப்படுத்தப்பட்டது என சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர்டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித் தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில், தனியார் அறக்கட்டளையின் சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் புற நோயாளிகள் பிரிவு புனரமைக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், புற நோயாளிகள் பிரிவை தொடங்கி வைத்தார். முன்னதாக அரசு மருத்துவமனையில் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டார். இதில், தன்னார்வ அமைப்பினர், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உதகை மலர் கண்காட்சியின் போது சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் தங்கள் சுய பாதுகாப்பை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 20 பேருக்கு மேல் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்வது உட்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். தாவரவியல் பூங்கா உட்பட்ட பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கரோனா தொற்றின் 2-வது, 3-வது அலைகளைச் சமாளிக்க தடுப்பூசி முக்கியகாரணமாக இருந்தது. இதில், 11.07கோடி தடுப்பூசி போடப்பட்டதால்தான் 3-வது அலை கட்டுப்படுத்தப்பட்டது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தக்காளி வைரஸ் காய்ச்சல் குறித்து பயப்பட தேவையில்லை. யாருக்காவது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பித்தாலே என்ன காய்ச்சல் என்பது தெரிந்து விடும். குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு தமிழக முதல்வரிடம் கூறி ரூ.5 கோடி நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். பழங்குடியினருக்கு வரும் சிக்கிள் செல் அனீமியா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற மரபுவழி வரும் நோய்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உறவுமுறையில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும். மரபு வழி இல்லாதவர்களுக்கு பரிசோதனை மூலம் வராமல் தடுக்கலாம்.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT