Published : 15 May 2022 04:00 AM
Last Updated : 15 May 2022 04:00 AM
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தை (டிஎன்பிஎல்) நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டிஎன்பிஎல் நிறுவனத்தில் தேவைக்கு அதிகமான அதிகாரிகள் உள்ள நிலையில், கடந்த ஆட்சியில் 469 அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இதனால் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் ரூ.70 முதல் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை வேறு துறைகளுக்கு மாற்றினால் மட்டுமே இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற முடியும். அதை நம்பியுள்ள மக்களும் பலன் பெறுவார்கள்.
இதுதவிர, நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, ஒய்வுபெற்ற 850-க்கும்மேற்பட்ட ரோல் தொழிலாளர்களுக்கு பணப் பலன்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. ரோல் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஒப்பந்ததார்களும், அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து, நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தக்கூடும்.
6 லட்சம் டன்
ஆண்டுக்கு 2 லட்சம் டன் காகிதம் மட்டுமே உற்பத்தி செய்யும் ஈரோடு எஸ்பிபி நிறுவனம் அதிகபட்சமாக ரூ.194 கோடி லாபத்தை ஈட்டுகிறது. ஆனால், டிஎன்பிஎல் 6 லட்சம் டன்னுக்கு மேலாக காகிதம், அட்டை மற்றும் தினமும் 900 டன் சிமென்ட் உற்பத்திசெய்து, 10-க்கு மேற்பட்ட தொழில்கள் இருந்தும் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்தக்குழு வழங்கும் அறிக்கையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT