Published : 15 May 2022 04:15 AM
Last Updated : 15 May 2022 04:15 AM

மதுரை மாநகர் திமுக செயலாளர்கள் மாற்றம் ?: பல வார்டுகளுக்கு புதிய செயலாளர்கள் தேர்வு

மதுரை

மதுரை மாநகரில் 10-க்கும் மேற்பட்ட வார்டுகளின் திமுக செயலாளர்கள் மாற்றப்படுகின்றனர். மாவட்டச் செயலாளர் மாற்றப்படுவாரா? என்கிற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி வார்டு செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் 10 நாட்களுக்கு முன் நடந்தது. இதில் பல வார்டுகளின் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படலாம் என்கிற தகவல் வெளி யாகியுள்ளது.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் விரிவாக்கப் பகுதிகளில் உள்ள 29 வார்டுகளைத் தவிர 71 வார்டுகள் மாநகர் நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் வருகின்றன.

மதுரை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி கட்டுப்பாட்டில் மதுரை மேற்கு, மத்திய சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. இதில் 38 வார்டுகள் உள்ளன.

மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் உள்ளார். இவரது கட்டுப்பாட்டில் மதுரை வடக்கு, தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. இதில் 33 வார்டுகள் இடம் பெற்றுள்ளன.

அண்மையில் நடந்த கட்சித் தேர்தலில் பல வார்டுகளுக்கு கடும் போட்டி இருந்தது. இதில் வார்டு நிர்வாகிகள் அனைவரும் செயலாளரை மாற்றுங்கள் எனக் கடிதம் கொடுத்துள்ள வார்டுகளின் செயலாளர்கள் மாற்றப் பட்டுள்ளனர். செயல்பாடுகளில் மெத் தனம் மற்றும் கடும் குற்றச்சாட்டு களுக்கு உள்ளாகியுள்ள சிலர் மாற்றப் பட்டுள்ளனர்.

தெற்கு மாவட்டத்தில் 8 பேர் மாற்றப் படுகின்றனர். வடக்கு மாவட்டத்திலும் 5 பேருக்கும் மேல் மாற்றம் இருக்கும். புதிய செயலாளர்கள் பெயருடன் கட்சி தலைமைக்குப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. சில நாட்களில் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சி தலைமை அறிவிக்கும்.

வார்டு நிர்வாகிகள் மாற்றம் ஒருபுறம் இருக்க, மாநகர் செயலாளர்களில் மாற்றம் இருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மாநகர் ஒரே மாவட்டமாக இருந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் 2 ஆகப் பிரிக்கப்பட்டு, புதிய செயலாளராக பொன்.முத்துராமலிங்கம் நியமிக்கப் பட்டார். சட்டப்பேரவை, மாநகராட்சி தேர்தல்களில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாவட்டப் பொறுப்பாளர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து கட்சித்தலைமைக்கு ஏராளமான புகார்கள் அனுப்பினர்.

மேயர் இந்திராணி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிபாரிசால் தேர்வானார். இவருக்கு மாநகர் திமுக மற்றும் 90 சதவீத கவுன்சிலர்கள் ஆதரவு இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்தை கட்டுக்கோப்பாக நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநகர் முழுவதும் ஒரே மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் கட்சி இருந்தால் மட்டுமே பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இது குறித்து கட்சித் தலைமைக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் சென்றதால் திருப்பூர், கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 4 சட்டப் பேரவை தொகுதிக்கும் சேர்த்து ஒரே மாவட்டச் செயலாளரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் மதுரையில் பதவியை இழக்கப்போவது பொன்.முத்துராமலிங்கமா, கோ.தளபதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இருவரில் கடந்த 2 ஆண்டுகளில் யார் மீது அதிகமான புகார்கள், விமர்சனங்கள் எழுந்தது, புகாராக சென்றது என்பது கட்சித்தலைமைக்கு நன்றாகவே தெரியும். இதன் அடிப்படையில் மாற்றம் இருக்கலாம்.

இதற்கிடையே தற்போதுள்ளவாறு 2 மாவட்டச் செயலாளர்களே பொறுப்பில் இருக்கட்டும் என்ற நிலைப்பாட்டை கட்சி எடுக்கும் சூழலும் உள்ளது. மாவட்ட செயலாளர் மாற்றத்தில் கட்சி எடுக்கும் முடிவு மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாக எதிரொலிக்கும் என்பதால் திமுகவினர் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x