Published : 14 May 2022 04:00 AM
Last Updated : 14 May 2022 04:00 AM
அடிக்காசு வசூலிக்க உரிமம் தனியாருக்கு தந்ததை எதிர்த்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த சாலையோர வியாபாரிகள் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி மூலம் அடிக்காசு வசூல் செய்யப்பட்டு வந்தது. அடி கணக்கை கொண்டு ரூ.10 முதல் 20 வரை வசூல் செய்யப்பட்டது. தற்போது நகராட்சி அடிக்காசு வசூல் செய்வதற்கு டென்டர் விட்டு தனியார் மூலம் வசூல் செய்து வருகிறது. இதனால் அடிக்காசு வசூலிப்பவர்கள் ரூ.50 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் அடிக்காசை தனியார் வசூல் செய்யும் போக்கினை கண்டித்தும், தனியாருக்கு டெண்டர் விட்ட நகராட்சி ஆணையரை கண்டித்தும், தனியாருக்கு டெண்டர் விட்ட அடிக்காசு வசூலை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் சிஐடியு மற்றும் புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
இதற்காக நேற்று காமராஜர் சிலை அருகில் சிஐடியூ சாலையோர வியாபாரிகள் ஒன்று திரண்டனர். சங்கத்தின் பிரதேச சிறப்பு தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்டோருடன் வியாபாரிகள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.
அண்ணாசாலையில் வந்தபோது ஒதியஞ்சாலை போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது வியாபாரிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருக்கும் ஊர்வலத்தில் வந்த வியாபாரிகளுக்கும் இடையே வாய்தகராறும், லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து 2 பெண்கள் உட்பட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT