Published : 01 May 2022 06:10 AM
Last Updated : 01 May 2022 06:10 AM
ஆசிரியர்களிடம் பள்ளி மாணவர்கள் தவறாக நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 15 வயது சிறுவனை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இருவரும் நெருங்கிப் பழகியதால் சிறுமிகர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில், இருவருக்குமிடையே தகராறுஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த சிறுமியும்,அவரது தாயாரும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து, அந்த சிறுவன் மீதுபோக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அந்த சிறுவனை 3 ஆண்டுகளுக்கு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்குமாறு கடந்த 2021-ல்சிறார் நீதிக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து சிறுவன் சார்பில், அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இந்த வழக்கில், சம்பவம் நடந்தபோது சிறுமி மைனர் என்பது சிறார் நீதிக்குழுமத்தில் சட்டப்படி நிரூபிக்கப்படவில்லை.
மேலும், இந்த வழக்கு உரிய காலக்கெடுவுக்குள் முறையாக விசாரிக்கப்படாமல், சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதால் சிறார் நீதிக் குழும உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
காதல் என்பது இதிகாசக் காலங்களில் இருந்து தொடர்கிறது. காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசம் பதின்மவயதிலான ஆண், பெண்களுக் கிடையே தவறுதலாக புரிந்து கொள்ளப்படுகிறது.
கரோனா ஊரடங்கு காலகட்டங்களில் பெற்றோருடன் நெருக்கம் குறைந்து, தொலைக்காட்சி, செல்போன்களில் மூழ்கிய குழந்தைகள், இளைஞர்கள் கரோனாவைவிட கொடிய நஞ்சை மனதில்விதைத்து, தங்களை கெடுத்துக்கொண்டுள்ளனர்.
இதன் மூலம் பதின்ம வயது சிறுவர், சிறுமியர் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே பள்ளிகளில் ஆசிரியர்களிடமே மாணவர்கள் தவறாகநடந்து கொண்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் உண்மையிலேயே வேதனை கலந்த, கவலைஅளிக்கிறது.
இதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு மட்டுமின்றி காவல் துறையினருக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய டிஜிபி சைலேந்திரபாபுவின் பதிவு ஆறுதல் அளிக்கிறது.
எனவே, மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் சமூகநலத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT