Published : 03 Apr 2022 05:28 AM
Last Updated : 03 Apr 2022 05:28 AM
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கட்டிடத்தின் வகை, பரப்பளவுக்கு ஏற்ப 25 முதல், 150 சதவீதம் வரை சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையம், தனது அறிக்கையில், 2022-23-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் வகையில் 2021-22-ம் ஆண்டில் சொத்து வரி தள விகிதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளன.
இதுதவிர மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ருத் திட்டங்களிலும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டிலும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர நகர்ப்புற உள்ளாட்சிகளில் கடந்த 2008-ம் ஆண்டும் சொத்து வரி பொது சீராய்வு செய்யப்பட்டது.
கடந்த 2013 ஜூலையில், சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்வது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு, பின்னர் 2019 நவம்பரில் நிறுத்தி வைக்கப்பட்டு, சொத்து வரி சீராய்வுக்கான வழிகாட்டுதல்கள் வழங்க குழுவும் அமைக்கப்பட்டது.
இக்குழு தற்போது அளித்துள்ள அறிக்கையில், சொத்து வரி சீராய்வு செய்வதற்கான, சந்தை மதிப்பு குறியீடு, பண வீக்கம், செலவு பணவீக்க குறியீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற காரணிகள் பரிசீலிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை விலை குறியீடு நாட்டின் பணவீக்கத்தை குறிப்பிடும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. மொத்த விற்பனை விலை குறியீடு உயர்வை பரிசீலிக்கும் போது 1998 முதல் 2022 வரை பண வீக்கம் 297 மடங்காகவும் 2008 முதல் 2022 வரை 1.79 மடங்காகவும் உயர்ந்துள்ளன.
இவ்வாறு பொருளாதார குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில், சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவினம் பலமடங்கு உயர்ந் துள்ளது.
இதன் அடிப்படையில், தமி ழகத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரியை சீராய்வு செய்யலாம் என குழுவின் பரிந்துரைகள் அரசால் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வரி உயர்வு
அதன்படி, 600 சதுரடிக்கும் குறைவான பரப்பு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம், 601 முதல் 1200 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 1201 முதல் 1800 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்கிறது.
இதுதவிர, 1800 சதுரடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிங்களுக்கு 100 சதவீதமும், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளிலும் சொத்து வரி சதுரடிக்கு ஏற்ப கட்டிடங்களுக்கான சொத்து வரி 25 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பாதிப்பு இல்லை
தற்போது அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவு 4 வகைகளாக பிரிக்கப்பட்டு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1200 சதுரடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்கள், மாநகராட்சியின் பிரதான பகுதியில் 62.40 சதவீதமும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகள், மாநிலத்தின் பிற 20 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 88 சதவீதமும் உள்ளது. பெரும்பாலான வர்கள் 1200 சதுரடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பதால் இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது.
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரித்தல் போன்றவற்றுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினம், அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் சொத்து வரி சீராய்வு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு முதல்
தற்போது சொத்து வரி சீராய்வானது இந்த 2022-23-ம் ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து வரியானது, நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக உள்ளது.
சென்னையில் 600 சதுரடி குடியிருப்பு கட்டிடத்துக்கான குறைந்தபட்ச சொத்துவரி ரூ.810 என்பது சீராய்வுக்குப்பின், ரூ.1,215 ஆக உயரும். ஆனால், மும்பையில் ரூ.2,157, பெங்களூரு- ரூ.3,464 ஆகவும், கொல்கத்தா- ரூ.3,510, புனே- ரூ.3,924ஆக உள்ளது. அதே போல், 600 சதுரடி குடியிருப்புக்கு சென்னையில் அதிகபட்சமாக ரூ.3,240 ஆக உள்ள சொத்து வரி, சீராய்வுக்குப்பின் ரூ.4,860 ஆக உயரும். ஆனால், இதே பரப்பு கொண்ட குடியிருப்புக்கு, பெங்களூருவில் ரூ.8,660, கொல்கத்தா- ரூ.15,984, புனே - ரூ.17,112, மும்பை- ரூ.84,583 ஆக உள்ளது.
கோவையில், 600 சதுரடி பரப்பு குடியிருப்புக்கு குறைந்த பட்ச சொத்துவரி ரூ.204 என்பது சீராய்வுக்குப்பின் ரூ.255 ஆக உயரும். ஆனால், இதே பரப்பு குடியிருப்புக்கு லக்னோ- ரூ.648, இந்தூர் ரூ. 1,324, அகமதா பாத்- ரூ.2.103 ஆக உள்ளது.
எனவே, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT