Published : 03 Apr 2022 05:52 AM
Last Updated : 03 Apr 2022 05:52 AM

வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு | கூடுதல் புள்ளிவிவரம் திரட்டி புதிய சட்டம் இயற்ற வேண்டும்: பாமக அவசர செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் நேற்று நடந்த பாமக செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறார் கட்சி நிறுவனர் ராமதாஸ். உடன் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணித் தலைவர் அன்புமணி. படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கூடுதல்புள்ளிவிவரங்களை திரட்டி, புதிதாக சட்டம் இயற்ற வேண்டும்என்று பாமக அவசர செயற்குழுகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம்செல்லாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக பாமக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, பொருளாளர் திலகபாமா, இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் க.பாலு மற்றும் நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் ராமதாஸ் பேசும்போது, “10.5 சதவீத உள் இடஒதுக்கீடு பெறுவதற்கு, போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று கருதுகிறேன். முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 2 வார அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். அவர் விரைவில் இதற்கு தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

அன்புமணி பேசும்போது, ‘‘உள் இடஒதுக்கீட்டில் தேவையான புள்ளிவிவரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புள்ளி விவரங்களை ஒரு வாரத்தில் சேகரிக்க முடியும். இந்தவிவகாரத்தில் அதிமுக உட்படஅரசியல் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. நம் வாழ்க்கையே போராட்டம்தான். இறுதியில் நிச்சயம்வெற்றி பெறுவோம்” என்றார்.

இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்:

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் எந்த அளவுக்கு பின்தங்கியுள்ளனர் என்பது குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டி, புதிய சட்டத்தை இயற்றுவதன் மூலம் மீண்டும் உள் இடஒதுக்கீடு வழங்க முடியும். தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தினரின் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் தமிழக அரசிடம் உள்ளன.எனவே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் அந்த புள்ளிவிவரங்களை தொகுத்து, ஆய்வுசெய்து, அவற்றின் அடிப்படையில் வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரை அறிக்கையை பெற வேண்டும்.

அதன் அடிப்படையில் வன்னியர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த, கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தலைமையில் 7 பேர் கொண்ட சமூகநீதி குழு அமைக்கப்படும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x