Published : 03 Apr 2022 06:01 AM
Last Updated : 03 Apr 2022 06:01 AM

தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவன பட்டமளிப்பு விழா: 268 மாணவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பட்டம் வழங்கினார்

தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்குப் பட்டம் வழங்கினார் மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ். உடன், மத்திய கைவினை பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் சாந்தமனு உள்ளிட்டோர்.படம் பு.க.பிரவீன்

சென்னை

சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்விநிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் கலந்துகொண்டு 268 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் 17 தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனங்கள் (NIFT) செயல்படுகின்றன. இதில் சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்விநிறுவனம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இங்கு மொத்தம் 7 இளநிலை பட்டப் படிப்புகள், 2 முதுநிலை பட்டப் படிப்புகள் உள்ளன.

இந்நிலையில், தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தின் 2020-22 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ளதிருவள்ளுவர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் தர்ஷனாவிக்ரம் ஜர்தோஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

214 பேர் இளநிலை பட்டம், 54 பேர்முதுநிலைப் பட்டம் என மொத்தம் 268 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட 12 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம், காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டன. ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் சிறந்த மாணவர்களுக்கான விருது 18 பேருக்கு வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தர்ஷனா விக்ரம் பேசும்போது, “ஆடை வடிவமைப்பு துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பது பெருமையாக உள்ளது. வடிவமைப்பு துறையில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது. ஜவுளித் துறையின் வளர்ச்சியில் மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் சாந்தமனு, ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் இயக்குநர் அனிதா மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x