Published : 03 Apr 2022 04:00 AM
Last Updated : 03 Apr 2022 04:00 AM

இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினை ஈழத் தமிழருக்கு புதிதல்ல: அனந்தி சசிதரன் கருத்து

தஞ்சாவூர்

இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினை ஈழத் தமிழர்களுக்கு புதிதல்ல என அந்நாட்டின் வட மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக பொதுச் செயலருமான அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள் 30 ஆண்டுகளாக மருந்து, உணவு, சுகாதாரப் பொருட்கள், எண்ணெய் உட்பட மிகப் பெரிய பொருளாதார தடைகளை சந்தித்து வாழ்ந்திருக்கிறோம். எனவே, தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினையை நாங்கள் பெரிய விஷயமாக பார்க்கவில்லை. சிங்களர்களுக்கு இது புது விஷயம் என்பதால் போராடுகின்றனர்.

இந்த பொருளாதார பிரச்சினை தற்போது ஏற்பட்டதல்ல. மாறி, மாறி ஆட்சிக்கு வந்தவர்களால் படிப்படியாக ஏற்பட்ட பிரச்சினை. மேலும், தமிழர்களை அழிப்பதற்காக உலக நாடுகளிடம் பெற்ற கடன்களால் ஏற்பட்ட பிரச்சினை. இப்பிரச்சினையால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள அமைச்சர்கள் மிகச் சுதந்திரமாக, அனைத்து வசதிகளுடன் சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.

நாங்கள் பொருளாதார உதவி என்பதைவிட, இந்த மண்ணில் எங்களுடைய உரிமைசார் உதவியைத்தான் கேட்டு நிற்கிறோம்.

எனவே, சர்வதேச விசாரணை நடத்தி, இன அழிப்பு நிகழாது என்ற உத்தரவாதத்தை அளித்து, எங்கள் மக்கள் நிம்மதியாக வாழலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

ஈழத் தமிழர்கள் 30 ஆண்டுகளாக மருந்து, உணவு உட்பட மிகப் பெரிய பொருளாதார தடைகளை சந்தித்து வாழ்ந்திருக்கிறோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x