Published : 27 Mar 2022 05:14 AM
Last Updated : 27 Mar 2022 05:14 AM

திமுக கவுன்சிலர்கள் 11 பேர் வராததால் புலியூர் பேரூராட்சித் தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதால், அலுவலகத்தில் இருந்து அதிருப்தியுடன் வெளியே வரும் இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கலாராணி உள்ளிட்ட கட்சியினர்.

கரூர்

புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது திமுக கவுன்சிலர்கள் 11 பேர் வராததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் திமுக 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக, சுயேச்சை தலா 1 என 15 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த 4-ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில், திடீரென திமுக கவுன்சிலர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பின், கூட்டணி கட்சிக்குஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த 8-ம் தேதி தலைவர் பதவியை புவனேஸ்வரி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு திமுக கவுன்சிலர்கள் 11 பேரும், சுயேச்சை கவுன்சிலரும் வரவில்லை. திமுக துணைத் தலைவர் அம்மையப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கலாராணி மற்றும் பாஜக கவுன்சிலர் ஆகிய 3 பேர் மட்டுமே வந்திருந்தனர். இதனால் போதிய உறுப்பினர்கள் இல்லை எனக் கூறி தலைவர் தேர்தலை தேர்தல் அலுவலர் லோகநாதன் ஒத்திவைத்தார்.

இதனால் தலைவர் பதவிக்கு போட்டியிட வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கலாராணி உள்ளிட்ட கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து கலாராணி செய்தியாளர்களிடம் கூறியது:

இந்த பேரூராட்சித் தலைவர் பதவி எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 4-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் திமுக கவுன்சிலர் புவனேஸ்வரியை நிறுத்தி வெற்றிபெற வைத்து கட்சியையும், என்னையும் அசிங்கப்படுத்தினர்.

இப்போது திமுக கவுன்சிலர்கள் அனைவரையும் துணைத்தலைவர் அம்மையப்பன் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வாக்களிக்க அனுமதிக்காததால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 2-வது முறையாக கட்சியையும், என்னையும் அசிங்கப்படுத்தி உள்ளனர். கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x