Published : 27 Mar 2022 04:30 AM
Last Updated : 27 Mar 2022 04:30 AM

நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் விருது: தமிழக அரசுக்கு விஐடி வேந்தர் விசுவநாதன் கோரிக்கை

சென்னை விஐடியில் ‘நாவலர் தகைசால் விருது’ வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் 2020-ம் ஆண்டுக்கான விருதை மறைமலை இலக்குவனாருக்கும், 2021-ம் ஆண்டுக்கான விருதை ஈரோடு தமிழன்பனுக்கும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் வழங்கினார். உடன் உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை தலைவர் விஜய் ஜானகிராமன், துணைவேந்தர் சங்கர் விசுவநாதன், இணை துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் மனோகரன் உள்ளிட்டோர்.படம்: எம்.முத்துகணேஷ்

மேலக்கோட்டையூர்

நாவலர் - செழியன் அறக்கட்டளை, தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாமற்றும் விஐடி சென்னை உடன்இணைந்து ‘நாவலர் தகைசால் விருது’ வழங்கும் விழா மேலக்கோட்டையூரில் உள்ள சென்னை விஜடியில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் நாவலர் - செழியன் அறக்கட்டளையின் தலைவரும், விஐடி வேந்தருமான முனைவர் கோ. விசுவநாதன் தலைமைதாங்கி 2020-ம் ஆண்டுக்கான ‘நாவலர் தகைசால் விருது’ மற்றும் ரொக்கப் பரிசு ரூ 2 லட்சத்தை முனைவர் மறைமலை இலக்குவனாருக்கும், 2021-ம்ஆண்டுக்கான ‘நாவலர் தகைசால் விருது’ மற்றும் ரொக்கப் பரிசு ரூ 2 லட்சத்தை கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழை பரப்புவதற்கும், காப்பாற்றுவதற்கும் நம்மால் முடிந்த வரை பணியாற்ற வேண்டும், அதேபோல் நாவலர் நெடுஞ்செழியன் மிகவும் கொள்கைப் பிடிப்புடையவர் மற்றும் நேர்மையானவர். நம்முடைய தமிழக அரசு நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் விருது வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என பேரறிஞர் அண்ணாவால் பாராட்டுப் பெற்றவர்தான் நாவலர் நெடுஞ்செழியன். மராட்டிய மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலம் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதேபோல் தமிழக அரசும் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உலகத் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் பேசும்போது, “சங்க காலத்தில் அரசர்கள், தமிழ்அறிஞர்களையும், கவிஞர்களையும் பாராட்டி பரிசு வழங்குவார்கள். அதேபோல் தற்போது தமிழறிஞர்களையும், கவிஞர்களையும் பாராட்டி விருது வழங்கும் கோ.விசுவநாதனை மனதாரப் பாராட்டுகிறேன். நாவலர் நெடுஞ்செழியன் சட்டப்பேரவையில் இலக்கிய நயத்தோடும், தனக்கே உண்டான நகைச்சுவை உணர்வோடுதான் பேசுவார். அதேபோல் இரா.செழியன் பல பிரச்சினைகளைக் கடந்து நாடாளுமன்றத்தில் அவசர நிலையை எதிர்த்துப் பேசினார்” என்று பழைய நினைவுகளைக் குறிப்பிட்டு பேசினார்.

விழாவில் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் விஜய் ஜானகிராமன், விஐடி சென்னை இணை துணை வேந்தர்முனைவர் வி. காஞ்சனா பாஸ்கரன், விஐடி சென்னை கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே. மனோகரன், ஜெம் கிரானைட்ஸ் வீரமணி, வழக்கறிஞர் சம்பத், விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், முனைவர் மறைமலை இலக்குவனார், கவிஞர் ஈரோடு தமிழன்பன்,தமிழறிஞர்கள், மாணவர்கள் பலர்பங்கேற்றனர். முடிவில் நாவலர் குடும்ப உறுப்பினர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x