Published : 27 Mar 2022 04:15 AM
Last Updated : 27 Mar 2022 04:15 AM
பட்டுக்கோட்டை நகராட்சி துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவரும், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் நகராட்சிகளின் துணைத் தலைவராக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், திமுக கூட்டணி 13 வார்டிலும், அதிமுக கூட்டணி 13 வார்டுகளிலும், சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலின்போது, திமுக கூட்டணி உறுப்பினர்கள் யாரும் வராததால், பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று பிற்பகல் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அதிமுகவைச் சேர்ந்த சுரேஷ், திமுகவைச் சேர்ந்த குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், மொத்தமுள்ள 33 உறுப்பினர்களில், சுரேஷூக்கு 17 பேர் வாக்களித்தனர். குமாருக்கு 15 பேர் வாக்களித்தனர். ஒருவர் செல்லாத வாக்களித்துள்ளார். இதையடுத்து, அதிக வாக்குகள் பெற்ற சுரேஷ் நகர்மன்ற துணைத் தலைவராக வெற்றி பெற்றார்.
திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில், திமுக 14, காங்கிரஸ் 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, அதிமுக 2, இந்திய கம்யூனிஸ்ட் 1, சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில், தலைவர் பதவி திமுகவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நகராட்சி துணைத்தலைவர் பதவியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதற்கான தேர்தல் மார்ச் 4-ம் தேதி காலை நடைபெற்ற நகர்மன்ற தலைவர் தேர்தலில், திமுகவை சேர்ந்த கவிதா வெற்றி பெற்றார். அன்று மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.எஸ்.பாண்டியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கியிருந்த இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதையேற்று ஆர்.எஸ். பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், நேற்று திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 24-வது வார்டு உறுப்பினர் ஜெயபிரகாஷ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மனு செய்யாத நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ராமசுப்பு, நகராட்சி துணைத் தலைவராக வி.ஜெயபிரகாஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.
இதேபோல, கூத்தாநல்லூர் நகர்மன்ற துணைத் தலைவர் தேர்தல் மார்ச் 4-ம் தேதி மதியம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு யாரும் வரவில்லை. இதன் காரணமாக இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக கூட்டணியில் 14-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சுதர்சன் மனு செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால், தேர்தல் அலுவலர் முகமது சாதிக், சுதர்சன் நகராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். இந்த நிகழ்வில் எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், க.மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT